நேற்று இரவு ஒரு தம்பதியினர் கடைக்கு ஒரு லேப்டாப்புடன் வந்தனர். என்ன விஷயம் என்றுக் கேட்டதற்கு பதில் சொல்ல மிகவும் தயங்கினர். கடையில் இருந்த அனைவரும் வெளியேறிய பின், இந்த லேப்டாப்பில் உள்ள Facebook, Messenger, Whatsapp போன்ற Social Media பைல்களை ரெகவர் செய்ய வேண்டும் என்றார்கள்.
என்ன விஷயம், ஏன் தயக்கம். எதுவாக இருந்தாலும், தைரியமாக சொல்லுங்கள். அப்போது தான் உங்களுக்கு எது தேவையோ அதை தெளிவாக எடுத்துத் தர முடியும் என்றேன்.
"ஒண்ணுமில்லை சார். என் பையன், வீட்டை விட்டு ஓடிப் போயிட்டான். அவன் எங்கே போயிருக்கிறான்னு தெரியல. அதை கண்டுபிடிக்கத்தான் வந்தோம்"
சரி கொடுங்கள் என்று வாங்கிப் பார்த்தால், பையன் கம்ப்யூட்டரில் புலி போல. அழகாக முழு ஹார்ட் ட்ரைவையும் format பண்ணி இருக்கிறான். எங்கே ரெகவரி பண்ணிவிடுவாங்களோ என்று அதில் மறுபடியும் விண்டோஸ் இன்ஸ்டால் பண்ணி இருக்கான். மேலும் பல video பைல்களை காப்பி செய்து அழித்து, திரும்பவும் ரெகவர் பண்ண முடியாதபடி செய்துள்ளான்.
எப்பவுமே குற்றம் புரிபவர்கள், ஏதாவது சிறு தவறு செய்திருப்பார்கள் என்ற கிரிமினல் கொள்கையின் படி, இதிலும் சிறு தவறு செய்திருந்தான். (அது என்ன? என்று சொல்லப்போவதில்லை. அப்புறம் நீங்களும் உஷார் ஆகிட்டீங்கன்னா?). ரெகவர் பண்ணால், ரொம்ப கஷ்டப்பட்டு கண்டுப்பிடிக்க தேவைப்படவில்லை. அவனின், ப்ரௌசெர் டெம்ப்ரவரி பைல்களை நோண்டும்போதே தெரிந்து விட்டது. பையன் ola cab புக் செய்திருக்கிறான். கோவாவில் ஒரு ஓட்டலை இரண்டு பெரியவர்களுக்கு என்று புக் செய்திருக்கிறான்.
இரண்டு பேருக்கு என்பது கொஞ்சம் இடித்ததால், அவன் கூட பொண்ணையும் கூட்டிட்டு போயிருக்கானா? என்றக் கேட்டவுடன், "பேய் அறைந்தது போல முழித்து விட்டு "ஆமாம்" என்றார்கள். "அப்போ பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் தந்திருப்பார்களே" என்றதற்கு, அவர்கள் "இனி எங்களுக்கு பெண்ணே இல்லை. தலை முழுகி விட்டோம்"
என்று சொல்லி போலீசுக்கு புகார் தர மறுத்து விட்டனர் என்றார். அந்தப் பெண்ணின் பெற்றோரை நினைத்து மனது வலித்தது. வெளியே மானத்துக்கு பயந்து, அப்படி சொல்லி இருந்தாலும், அந்த பெற்றோரின் வருங்கால வாழ்க்கை என்பது சவ வாழ்க்கை தான்.
தெரிந்த போலீஸ் நண்பருக்கு போன் செய்து, பெண் வீட்டில் வழக்கு எதுவும் பதிய விரும்பவில்லை என்று தெரிந்துக் கொண்டேன். அந்த போலீஸ் நண்பருக்கு தெரிந்தக் குடும்பம் தானாம். அவரே நேரில் போய் கேட்டாலும், புகார் கொடுக்க விரும்பில்லை என்று மறுத்து விட்டார்களாம்.
சரி என்று எடுத்த டேட்டாவை அவர்களுக்கு கொடுத்து விட்டு, சாதாரணமாய் கேட்டேன்.
"பையன் என்ன பண்றான்."
"+2 படிச்சிக்கினு இருக்கான் சார். பாருங்க சார். பரீட்சைக் கூட எழுதாம ஓடிட்டான்."
அடப்பாவிங்களா! நாடு எங்கே தான் சார் போகுது.
adimurugan
Sunday, March 25, 2018
Thursday, December 1, 2016
பணமில்லா வர்த்தகம் - சாத்தியமா? - ஒரு நடைப்பாதை வியாபாரியின் விளக்கம்.
நமது பிரதமர் திரு. நரேந்திர மோடி, இந்தியா ஒரு பணமில்லா வர்த்தக நாடாக வேண்டும் என்று தன் விருப்பத்தை வெளியிட்டுள்ளார். 90% சதவித சில்லறை வர்த்தகம் நடைபெறும் ஒரு நாட்டில், அதுவும் மொத்த மக்கள் தொகையில் 50% மேல் சில்லறை வர்த்தகத்தை மட்டுமே நம்பி குடும்பம் நடத்தட்டும் ஒரு நாட்டில் இது சாத்தியமா? என்று ஒரு கேள்வி எல்லோரையும் போல என் மனத்தில் எழுந்தது.
எனக்கு தெரிந்த ஒருவர் கடைத்தெருவில் நடைப்பாதையில் கடை வைத்துள்ளார். அவர் நன்றாக படித்திருக்க வேண்டியவர். +2வில் 1000 மார்க்குக்கு mமேல் எடுத்திருந்தாலும், தன குடும்ப சுமையை சுமக்க, அதன் பின் திருப்பூரில் வேலைக்கு சென்று, தொலைத்தூரக் கல்வியில் B.Com பட்டம் பெற்று, தி சொந்த ஊருக்கு திரும்பி, இப்போது நடைப்பாதை கடையில் பழங்கள் விற்றுக்கொண்டிருக்கிறார். அவரைக் கேட்டபோது, சிரித்துக் கொண்டே, "அதெல்லாம் முடியவே முடியாது சார்" என்றார். எப்படி என்று அவர் விளக்க விளக்க, நான் அதிர்ந்துப் போனேன்.
சார். இப்போது நான் தினமும் ரூபாய் 5000 முதலீடு செய்து, பழம் வாங்கி வந்து ரூபாய் 6000/-க்கு விற்கிறேன். தினமும் 1000 ரூபாய் லாபம். இதில், நகராட்சி வரி, போலீஸ் லஞ்சம், அழுகிப் போகும் பழங்கள், என் சாப்பாடு செலவு, தள்ளு வண்டி வாடகை, பழங்கள் எடுத்து வர ஆட்டோ வாடகை என தினமும் 500 ரூபாய்கள் செலவு. மிச்சம் 500 ரூபாய்கள் எனக்கு இறுதி லாபம். இதையே நான் பணமில்லா வர்த்தகத்தில் செய்வதாக வைத்துக் கொள்ளுங்கள். என்னுடைய லாபம் அப்படியே பாதியாக குறையும். எப்படி என்று விளக்குகிறேன். இது ஒரு வருடத்திற்கு . . .
பணமில்லா வர்த்தகம்
POS Machine வாடகை மாதம் 850 * 12 10,200.00
ஒரு நாளைக்கு 6000/- ரூபாய்க்கு 0.75% POS
Transaction charge 45/- 365 நாளைக்கு 45*365 16,425.00
Transaction charge 45/- 365 நாளைக்கு 45*365 16,425.00
அடுத்த நாள் வீட்டு செலவிற்கு ATMஇல் பணம்
எடுக்க வேண்டும் ஒரு மாதத்திற்கு 5 முறைக்கு மேல்
எடுத்தால் ஒவ்வொரு முறையும் 23/-சர்வீஸ் சார்ஜ்
மாதத்திற்கு 10 முறை மட்டுமே எடுத்தால் 230*12 276.00
எடுக்க வேண்டும் ஒரு மாதத்திற்கு 5 முறைக்கு மேல்
எடுத்தால் ஒவ்வொரு முறையும் 23/-சர்வீஸ் சார்ஜ்
மாதத்திற்கு 10 முறை மட்டுமே எடுத்தால் 230*12 276.00
SMS Charges 30/- x 4 Quarter 120.00
Bank Book keeping / folio charges, etc 200.00
--------------
Total Bank Charges 27,221.00
--------------
இதை தவிர, POS மெஷினில் ஸ்வைப் செய்யப்படும் பணம் உடனே என் அக்கௌன்ட்டிற்கு வராது. அடுத்த நாள் தான் வரும். எனவே என்னுடைய அடுத்த நாளுடைய முதலீடு 5000/- ரூபாய்க்கு நான் வைத்திருக்க வேண்டும். அப்படி என்றால் என்னுடைய முதலீடு இரு மடங்காகிறது. (ரூபாய் 10,000/-).
இதை விடப் பெரிய காமெடி இருக்கிறது. ஒரு நாளைக்கு 6000/- வியாபாரம் செய்கிறேன் என்றால், ஒரு வருடத்திற்கு 6000*365 = 21,90,000/-. பத்து லட்சத்திற்கு மேல் வியாபாரம் செய்தால் TIN வேண்டும். மாதாமாதம் நான் வரி செலுத்த வேண்டும் அல்லது 0% வரியுள்ள பொருளாயிருந்தாலும் கணக்கு சமர்ப்பிக்க வேண்டும். இதற்காக நான் ஒரு கணினி வாங்க முடியாது. மாதத்திற்கு 100/- ரூபாய்க்கு ஒரு ஆடிட்டரை வைத்து கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். அதன் செலவு வருடத்திற்கு 1200/-. வருடத்திற்கு இருபது லட்ச ரூபாய் பரிவர்த்தனை செய்வதால், Income Tax தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு ஒரு வருடத்திற்கு ஆடிட்டருக்கு ரூபாய் 500/-.TIN & PAN வாங்க முதலீடு 1000/-.
இவ்வளவிற்கும் என் லாபம் என்பது ஒரு வருடத்திற்கு 500 * 365 = 1,82,500/-. வாயை பிளக்காதீர்கள். இது நான்கு பேர் கொண்ட என் மொத்த குடும்பத்திற்கும் ஒட்டு மொத்த வருமானம். வருமான வரிக்கு கீழே வராத என் வருமானத்தில் இருந்து கிட்டத்தட்ட 29000/- வங்கியும், அரசும் எடுத்துக் கொள்கிறது. கிட்டத்தட்ட 16%.இந்த நஷ்டத்தை நான் யாரிடம் வசூல் செய்ய முடியும். நுகர்வோரிடம் இருந்து தானே. அப்புறம் எப்படி விலைவாசி குறையும். ஏறத்தான் செய்யும். இதனால், நுகர்வோருக்கும் பாதிப்பு தான்.
இதை விட முக்கியம். இந்த பாதிப்புகள் என் வரை மட்டுமல்ல. நான் பழங்களை வாங்கும் வினியோகிஸ்தருக்கும் இதே கதை தான். அவரும் neft transfer charges, நான் பொருளை வாங்கும்போது POS charges என 16% லாபத்தில் நஷ்டம். எனவே அவரும் அவர் விலையை ஏற்றுவார். அப்போது மேலும் 16% அல்லது 20% ஏற்றலாம். ஒட்டு மொத்தமாக பார்த்தால், விலை 150% ஏறும். வங்கிகள் லாபம் கொழிக்கும். ஆளே தேவை இல்லை. சில கணினிகளும், ஒரு சில வேலையாட்களும் வைத்துக் கொண்டு, வங்கிகள் கோடிக்கணக்கில் லாபம் பார்க்கும்.
அவர் சொன்னது அனைத்தும் சரியே. ஒரு சில பண எண்ணிக்கை வேண்டுமானால் கூடலாம். குறையலாம். மற்றபடி அனைத்தும் சரியே. பணமில்லா வர்த்தகம் இவ்வளவு பாதிப்புகளை, ஒரு நடைப்பாதை வியாபாரிக்கும், நுகர்வோருக்கும் ஏற்ப்படுத்துமெனில் இது சாத்தியமே ஆனாலும், நம் நாட்டிற்கு தேவையா? குறைந்தப் பட்சம் சிறு வணிகத்திற்க்கேனும் இதிலிருந்து கட்டாயம் விலக்கு அளிக்க வேண்டும். இல்லையெனில் தனி மனிதனின் வாங்கும் திறனை அதிகரிக்க, அவனின் தனி மனித வருமானத்தை அதிகரிக்க வேண்டும். இது மீண்டும் ஒரு பண மதிப்பை குறைக்கும் வழியைத் தான் தேடும்.
கறுப்புப் பண பெருச்சாளியின் வாலை பிடிக்கப் போய், புலியின் வாலை பிடிக்கப் போகிறோமோ? என்ற அச்சம் எழாமலில்லை.
Labels:
1000,
500,
cashless,
demonetization,
POS,
rupee,
tamil,
transaction,
குறு,
பண,
பணமில்லா,
பாதிப்பு,
மதிப்பு,
வணிகம்,
வர்த்தகம்
Location:
Tiruvannamalai, Tamil Nadu 606601, India
Monday, August 15, 2016
கீழடி - 2300 வருடங்களுக்கு முன் - ஒரு காலப் பயணம்.
கீழடி - சங்கக்காலத்தின் வாயில்.
கீழடி. மதுரைக்கு 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு சிறு கிராமம். என் அடிக்கு (காலடி) கீழே உன் பண்டைய நாகரீகம் இருக்கிறது என்பதாலோ என்னவோ, இந்த பெயர் அந்தக் கிராமத்துக்கு வந்துள்ளது.
வரலாற்றை கண்டுபிடித்த வரலாறு.
2013-2014 இல் சங்கக் கால ஊர்களைக் கண்டுபிடிக்கும் நோக்குடன். வைகை ஆற்றின் கரையோரம் இரு கரைகளிலும், வைகை ஆரம்பிக்கும் வெள்ளி மலையில் இருந்து முடியும் ஆற்றங்கரை வரையில் நான்கு மாவட்டங்களில் (திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் மற்றும் தேனி) 293 இடங்களில் ஆராய்ச்சி செய்யப்பட்டது. இதில் கிட்டத்தட்ட 170 இடங்களில் புதிதாக தொல்லியல் பொருட்கள் கண்டுப்பிடிக்கப்பட்டன. கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் இரும்புக் காலம் முதல் 18ஆம் நூற்றாண்டு வரை சேர்ந்தவையாக இருந்தன. எவ்வளவு கிடைத்தாலும் மக்கள் வாழ்ந்த நகரம் மட்டும் கிடைக்கவே இல்லை. சிறு சிறு கிராமங்கள், மூன்று நான்கு கிராமங்களுக்கு சேர்த்து ஒரு சுடுகாடு என்ற அளவில் மட்டுமே கிடைத்தது.
சுதந்திரத்துக்கு முன் அகழ்வாராய்ச்சி நடந்த பின், பெரிய அளவில் வைகை ஆற்றின் கரையில் மத்திய அரசோ, தமிழக அரசோ ஆராய்ச்சி எதுவும் நடத்தவில்லை. 1950களில் இந்திய தொல்லியல் துறையை சேர்ந்த திரு. K.V.Raman அவர்கள் தலைமையில், பெரிய குளம், மேலூர், திருமங்கலம் தாலுக்காக்களில் கிராமம் கிராமமாக சர்வே எடுத்து, நிறைய இடங்களை தொல்லியல் இடங்களாக கண்டுப்பிடித்தனர்.
1980களில் தமிழக தொல்லியல் துறை வைகை ஆறு முன்பு கடலுடன் கலந்த இடமும், சங்கக் கால துறைமுகமுமான அழகன்குளம் ஊரில் ஆறு காலக்கட்டங்களில் செய்தது தான் வைகை ஆற்று படுக்கையில் செய்த பெரிய அகழ்வாராய்ச்சி. 2006ஆம் வருடம், மதுரை அருகே உள்ள கோவலன்பொட்டலில், தமிழக தொல்லியல் துறை சில இடங்களைக் கண்டறிந்தது. இருந்தும்,மிகப்பெரிய அளவில் எதுவும் கண்டுப்பிடிக்கப்படவில்லை.
எனவே, வைகை ஆற்றின் கரையோரம், மீண்டும் பெருமளவில் ஆராய்ச்சி செய்திட வேண்டும் என்று மத்திய தொல்லியல் துறையைச் சேர்ந்த திரு. அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்கள் கோரிக்கை விடுத்தார். அவரின் கோரிக்கை ஏற்கப்பட்டு, வைகை ஆற்றின் இரு கரைகளிலும் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு அகழ்வாராய்ச்சி செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இதில் தெரிவு செய்யப்பட்ட 293 இடங்களில் இருந்தும் பானைகள், முதுமக்கள் தாழிகள், செம்பு, வெள்ளி காசுகள், தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பொருட்கள் கிடைத்தாலும், பெரியதாக எதுவும் கிடைக்கவில்லை.
ஆராய்ச்சியின் இறுதிக்கட்டமாக மதுரை நகரை சுற்றி உள்ள இடங்களில் ஆராய்ந்த போது, குகைகளில் வரையப்பட்ட கி.மு.3 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஓவியங்கள், கல்வெட்டுகள் மட்டுமே கிடைத்தன. மதுரை நகரம் முழுவதும் வளர்ந்துவிட்டிருந்தபடியால் நகருக்குள் எதுவுமே கண்டுப்பிடிக்க முடியவில்லை.
கிட்டத்தட்ட ஆராய்ச்சியை முடிக்கும் தருவாயில், இவர்கள் கீழடி வந்த போது, ஒரு லாரி ஓட்டுனரிடம் இவர்கள் பேசியபோது அவர் அருகிலிருந்த ஒரு தென்னந்தோப்பை காண்பித்து, அங்கே போய் பாருங்கள், வெறும் பானை ஓடுகளாக இருக்கிறது. சில இடங்களில் பெரிய பானைகளும் இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார். இவர்களும் அசுவாரசியமாக அங்கு சென்று பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். எங்குப் பார்த்தாலும் உடைந்த பானை ஓடுகள், சிலவற்றில் ஓவியங்களுடன், பெரிய பெரிய சுட்ட செங்கற்கள் (பெரிய அளவிலான சுட்ட செங்கற்கள் மிகப்பழங்காலத்தில் உபயோகப்படுத்தப்பட்டவை) இருந்தன. உடனே ஒரு JCBயை அழைத்து வந்து இரண்டு தென்னை மரங்களுக்கு இடையேயான இடத்தில் மெதுவாக தோண்ட, அனைவரும் மெய் மறந்தனர். ஆமாம். சங்கக்கால கட்டிடத்தின் இரு சுவர்கள் இணையும் இடத்தைத் தான் அவர்கள் பார்த்தது.
அப்போது தான் முதன் முதலில் நம் சங்கக்காலமும், நிகழ்காலமும் இணையத் தொடங்கியது.
![]() |
பள்ளிச்சந்தையில் இருந்து இப்பொழுது வைகை இருக்கும் தூரம். |
தொடரும் . . . . .
Labels:
archaeology,
keeladi,
period,
sangam,
tamil,
கீழடி,
சங்கக் காலம்,
சங்கம்,
தமிழ்,
தொல்லியல்
Sunday, January 17, 2016
அகவை நான்பத்தும் ஐந்தும் அழிந்தது
அகத்தை ஆண்டதுஉம் அகந்தை அகன்றது
இகத்தை ஈன்றதுஉம் இனிதே இழிந்தது
சுகத்தை சுரந்ததுஉம சுந்தம் சுழிந்தது
சகத்தை சார்புஉற்றும் சந்தம் சரிந்தது
தகத்தை தானேற்றும் தாகம் தணிந்தது
நுகத்தை தோளேற்றும் போகம் நலிந்தது
துகத்தை தேடிபிதற்றும் அகம் ஒழிந்தது.
அகவை - வயது
நான்பத்தும் - நாற்பது
அகத்தை - மனத்தை
அகந்தை - திமிர்
இகத்தை - இன்பம்
ஈன்றதுஉம - கொடுத்ததும்
சுந்தம் - சுத்தம்
சுழிந்தது - ஆரம்பித்தது
சகத்தை - உலகத்தை
சந்தம் - கருத்து, பழக்கம்
தகத்தை - நெருப்பை
நுகத்தை - பாரத்தை
துகத்தை - செல்வத்தை
Monday, September 21, 2015
பிள்ளை (யார்?) - II - ஆரிய கடவுளா?
பிள்ளையார் ஒரு ஆரிய கடவுளா என்பதை ஆராய, ஆரியர்களின் பழம்பெரும் புத்தகமான வேதங்களை பார்ப்போம்.
ப்ரஹஸ்பதியை பாடும் அந்த சுலோகம்
ghaṇānāṃ tvā ghaṇapatiṃ havāmahe kaviṃ kavīnāmupamaśravastamam |
jyeṣṭharājaṃ brahmaṇāṃ brahmaṇas pata ā naḥ ṣṛṇvannūtibhiḥ sīda sādanam ||
ரிக் வேதத்தை பொறுத்தவரை முக்கிய தெய்வங்கள் எனப்படுவது :
இந்திரன், வருணன், அக்னி, ருத்ரன், மித்திரன், வாயு, சூர்யன், விஷ்ணு, சாவித்ரி, பூசன், உஷா, சோமா, அஸ்வின் (2 பேர்), மாருத், எட்டு திசைகள், 12 ஆதித்யர்கள், வசிஷ்டா, ப்ரஹஸ்பதி, யமன், மன்யு, புருஷா,சரஸ்வதி, .. இப்படி செல்கிறது. இதில் எங்கேயும் விநாயகர் இல்லை.
அதற்காக பிள்ளையார் வேதங்களில் எங்கேயும் இல்லை என்று நான் சொல்லவில்லை. இருக்கிறார். ஆனால் தெய்வங்களைப் பற்றி குறிப்பிடும் ரிக் வேதத்தில் இல்லை.
வேறெங்கு இருக்கிறார் என்று அடுத்து பார்க்கலாம்.
ரிக் வேதம்
வேதங்களில் முதன்மையானது வேதம் ரிக் வேதம். ரிக் வேதத்தில் எங்கேயுமே பிள்ளையார் பற்றி இல்லை. இருந்தாலும் ஒரு சிலர், அதில் வரும் ஒரு சுலோகத்தை கணபதியை குறிப்பதாக சொல்லுவார்கள். அது ரிக் வேதம் இரண்டாம் தொகுதியில் 23ஆம் சுலோகமாக வருகிறது. விநாயகர் முழு முதற் கடவுளாக இருக்கும் பட்சத்தில் அவரைப்பற்றி ஏன் 214வது சுலோகத்தில் சொல்ல வேண்டும். அதுவுமில்லாது, ரிக் வேதத்தில் இந்த ஒரு இடத்தில் மட்டுமே பிள்ளையார் வருவதாக கூறுகிறார்கள். அதிலும் இதில் முதல் வரியில் மட்டும்.
இதில் நாம் முக்கியமாக பார்க்க வேண்டியது, இந்த 214 மட்டுமின்றி அடுத்து வரும் 215, 216 மற்றும் 217 ஆகியவை தேவ கணங்களின் தலைவரான் ப்ரஹஸ்பதியை குறிக்கிறது. இது விநாயகரைத் தான் குறிக்கிறது என்று சொல்லுபவர்கள் சுட்டிக்காட்டும் காரணம் அதில் வரும் ஒரு வார்த்தை, "கணபதிம்". இதற்கு என்ன அர்த்தம் கணம்களின் அதிபதி என்று அர்த்தம். கணங்களின் அதிபதி ப்ரஹஸ்பதி என்று முன்னமே வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக பிள்ளையாரின் யானை தலையை பற்றியோ, தொந்தியை பற்றியோ இதில் எந்த குறிப்பும் இல்லை. மேலும், ப்ரஹஸ்பதி கணங்களின் தலைவர், போரில் நல்லவர்களை பாதுகாப்பவர், உடலை, விளைச்சலை பாதுகாப்பவர். செல்வங்களை அளிப்பவர். இவர் இடத்தை தான் பின்னாளில் விநாயகர் பிடித்துக் கொண்டார். இவருக்கும் விநாயகருக்கும் என்ன வித்தியாசம். இவர் முனிவர், மனிதனை போல் உடல் கொண்டவர். இவருக்கு தொந்தியோ, தும்பிக்கையோ கிடையாது.
ப்ரஹஸ்பதியை பாடும் அந்த சுலோகம்
ghaṇānāṃ tvā ghaṇapatiṃ havāmahe kaviṃ kavīnāmupamaśravastamam |
jyeṣṭharājaṃ brahmaṇāṃ brahmaṇas pata ā naḥ ṣṛṇvannūtibhiḥ sīda sādanam ||
ghaṇānāṃ - கணனம் - கணங்களின்
tvā - தாங்கள்
ghaṇapatiṃ - கணங்களின் தலைவர்.
havāmahe - உங்களை வேண்டுகிறோம்
kaviṃ kavīnām - மெய்யறிவின் மெய்யறிவே
upamaśravastamam - அனைவரை விட புகழுடையவரே.
jyeṣṭharājaṃ brahmaṇāṃ - வேண்டுதலின் முதல் அரசரே
brahmaṇas pata ā naḥ - ஓ! ப்ரஹஸ்பதி
ṣṛṇvannūtibhiḥ - எங்கள் வேண்டுதலை கேளுங்கள்.
sīda sādanam - எங்கள் வேள்வியை ஏற்றுக்கொண்டு வந்து அமருங்கள்.
இதில் எங்கு விநாயகர் வருகிறார்.
இந்திரன், வருணன், அக்னி, ருத்ரன், மித்திரன், வாயு, சூர்யன், விஷ்ணு, சாவித்ரி, பூசன், உஷா, சோமா, அஸ்வின் (2 பேர்), மாருத், எட்டு திசைகள், 12 ஆதித்யர்கள், வசிஷ்டா, ப்ரஹஸ்பதி, யமன், மன்யு, புருஷா,சரஸ்வதி, .. இப்படி செல்கிறது. இதில் எங்கேயும் விநாயகர் இல்லை.
அதற்காக பிள்ளையார் வேதங்களில் எங்கேயும் இல்லை என்று நான் சொல்லவில்லை. இருக்கிறார். ஆனால் தெய்வங்களைப் பற்றி குறிப்பிடும் ரிக் வேதத்தில் இல்லை.
வேறெங்கு இருக்கிறார் என்று அடுத்து பார்க்கலாம்.
Labels:
adimurugan,
ganesa,
history,
veda,
vinayagar,
ஆராய்ச்சி,
பிள்ளையார்,
ரிக்,
வரலாறு,
விநாயகர்,
வினாயகர்,
வேதம்
Wednesday, September 16, 2015
பிள்ளை - (யார்)? - I
பொறுப்பு துறப்பு : எனக்கு கிடைத்த தகவல்கள், உண்மையாக இருக்குமா என்று எனக்கிருக்கும் சிறு ஆறாவது அறிவை உபயோகித்து பிரித்தறிந்து, என் மனம் ஒத்துக் கொண்டதை மட்டுமே இங்கே எழுதுகிறேன். நான் நாத்திகனோ, ஆத்திகனோ அல்ல. நான் எந்த இசத்தையும் சார்ந்தவனில்லை. உங்களுக்கு நான் எழுதுவதில் மாற்றுக் கருத்து இருப்பின், கட்டாயம் இங்கே பகிரலாம், வரம்புக்கு உட்பட்டு. தயவு செய்து உணர்ச்சி மிகுந்த வார்த்தைகளை தவிர்க்கவும்.
பிள்ளையார் சதுர்த்தி வந்து விட்டது. எல்லோரும் கொழுக்கட்டை சாப்பிடவும், குழந்தைகள் களிமண் வைத்து விளையாடவும் ஆசையாய் இருப்பார்கள். பிள்ளையார் சதுர்த்தி பற்றி எழுதலாமே என்று தான் முதலில் யோசித்தேன். ஆனால் எண்ணங்கள் எங்கெங்கோ போய் கடைசியில் பிள்ளையார் பிடிக்க குரங்காய் போனது. பிள்ளையார் எப்படி முழு முதற் கடவுள் ஆனார்? ஏன் தமிழ் கடவுள் முருகன், முழு முதற் கடவுள் ஆகவில்லை? என்று யோசித்துக் கொண்டே, என்னிடம் உள்ள பழைய சங்க இலக்கியங்களில் எங்காவது பிள்ளையார் பற்றி குறிப்பு இருக்கிறதா என்று தேடிய போது, எங்கேயும் காணவில்லை. அப்போ பிள்ளையார் எங்கிருந்து வந்தார் என்று இணையங்களில் உலா வந்தேன். நான் படித்து, புரிந்துக் கொண்டதின் சாராம்சம் இது.
நமது தமிழ் சங்கத்தை பொறுத்த வரையில், ஐந்து நிலங்களுக்கான கடவுள்கள் ஐந்து தான். அவை,
குறிஞ்சி - முருகன்
முல்லை - திருமால் (இவர் எப்படி ஆரியன் ஆனார் என்று தெரியவில்லை)
மருதம் - இந்திரன்
நெய்தல் - வருணன்
பாலை - கொற்றவை
கி.மு. 1000 முதல் கி.மு.300 வரை உள்ள வருடங்களில் எழுதப்பட்டதாக சொல்லப்படும் தொல்காப்பியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது இது. இதில் விநாயகரைப் பற்றி எந்த குறிப்பும் இல்லை.
தமிழின் ஐம்பெரும் காப்பியங்களிலும் முழு முதற்கடவுளான பிள்ளையாரைப் பற்றி எங்கேயும் இல்லை.
தமிழகத்தில் கண்டெடுக்கப்பட்ட கோயில்களில் மிகவும் பழையதான மாமல்லபுரம் அருகில் இருக்கும் சுப்பிரமணியர் கோயிலிலும் பிள்ளையார் இல்லை.
நான் அறிந்த வரையில் தமிழ் இலக்கியங்களில் பிள்ளையார் முதலில் வந்தது, திருமூலர் எழுதிய திருமந்திரத்தில் தான். ஆனால் அந்த பாடலும் பிற்சேர்க்கை தான், மூல புத்தகத்தில் அந்த பாடல் இல்லை என்று தமிழ் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
ஐந்து கரத்தினை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
என்ற வரிகளில் உள்ள இந்தி என்ற வார்த்தை வட மொழி சொல். யானை என்பதை நாம் களிறு என்றே இலக்கியங்களில் குறிப்பிடுவோம். அதோடு திருமுறைகளில் எதிலும் விநாயகர் காப்பு என்பதே இல்லை. இதில் மட்டும் பின்னர் சேர்க்கப்பட்டிருக்கிறது. அதற்கு சான்றாக, தமிழுக்கு விநாயகர் வருவதற்கு முன்பே சேக்கிழார் திருமந்திரம் பற்றி கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.
"ஒன்றவன்றான் என எடுத்து முன்னிய அப்பொருள் மாலைத் தமிழ் மூவாயிரம் சாத்தி"
அதாவது "ஒன்றவன்றான்" என்று ஆரம்பித்து மூவாயிரம் பாடல் கொண்டது திருமந்திரம் என்கிறார். அப்படியானால் விநாயகர் காப்பு பிற்சேர்ப்பு என்பது புலனாகிறது.
அப்போது பிள்ளையார் எங்கிருந்து தான் வந்தார்.
"அவர் ஆரிய கடவுள்" - அதுவும் இல்லை.
அவர் ஆரிய கடவுள் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்றே ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
விநாயகரைப் பற்றி ஆராய்ந்தால் பல ஆச்சரியமான விடயங்கள் கிடைக்கின்றன. சினிமாவில் ஒரே பாட்டில் கதாநாயகன் பணக்காரனாக ஆவது போல், இரண்டே நூற்றாண்டுகளில் விநாயகர் இந்து, புத்த, ஜைன மதங்களின் முழு முதற்கடவுள் ஆகிவிட்டார். அதுவும் எங்கிருந்து? வில்லனின் அடியாளாய் இருந்து கதாநாயகனாய் ஆகி இருக்கிறார்.
மேலும் பல விவரங்களுடன், தொடருகிறேன்.
பிள்ளையார் சதுர்த்தி வந்து விட்டது. எல்லோரும் கொழுக்கட்டை சாப்பிடவும், குழந்தைகள் களிமண் வைத்து விளையாடவும் ஆசையாய் இருப்பார்கள். பிள்ளையார் சதுர்த்தி பற்றி எழுதலாமே என்று தான் முதலில் யோசித்தேன். ஆனால் எண்ணங்கள் எங்கெங்கோ போய் கடைசியில் பிள்ளையார் பிடிக்க குரங்காய் போனது. பிள்ளையார் எப்படி முழு முதற் கடவுள் ஆனார்? ஏன் தமிழ் கடவுள் முருகன், முழு முதற் கடவுள் ஆகவில்லை? என்று யோசித்துக் கொண்டே, என்னிடம் உள்ள பழைய சங்க இலக்கியங்களில் எங்காவது பிள்ளையார் பற்றி குறிப்பு இருக்கிறதா என்று தேடிய போது, எங்கேயும் காணவில்லை. அப்போ பிள்ளையார் எங்கிருந்து வந்தார் என்று இணையங்களில் உலா வந்தேன். நான் படித்து, புரிந்துக் கொண்டதின் சாராம்சம் இது.
நமது தமிழ் சங்கத்தை பொறுத்த வரையில், ஐந்து நிலங்களுக்கான கடவுள்கள் ஐந்து தான். அவை,
குறிஞ்சி - முருகன்
முல்லை - திருமால் (இவர் எப்படி ஆரியன் ஆனார் என்று தெரியவில்லை)
மருதம் - இந்திரன்
நெய்தல் - வருணன்
பாலை - கொற்றவை
கி.மு. 1000 முதல் கி.மு.300 வரை உள்ள வருடங்களில் எழுதப்பட்டதாக சொல்லப்படும் தொல்காப்பியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது இது. இதில் விநாயகரைப் பற்றி எந்த குறிப்பும் இல்லை.
தமிழின் ஐம்பெரும் காப்பியங்களிலும் முழு முதற்கடவுளான பிள்ளையாரைப் பற்றி எங்கேயும் இல்லை.
தமிழகத்தில் கண்டெடுக்கப்பட்ட கோயில்களில் மிகவும் பழையதான மாமல்லபுரம் அருகில் இருக்கும் சுப்பிரமணியர் கோயிலிலும் பிள்ளையார் இல்லை.
நான் அறிந்த வரையில் தமிழ் இலக்கியங்களில் பிள்ளையார் முதலில் வந்தது, திருமூலர் எழுதிய திருமந்திரத்தில் தான். ஆனால் அந்த பாடலும் பிற்சேர்க்கை தான், மூல புத்தகத்தில் அந்த பாடல் இல்லை என்று தமிழ் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
ஐந்து கரத்தினை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
என்ற வரிகளில் உள்ள இந்தி என்ற வார்த்தை வட மொழி சொல். யானை என்பதை நாம் களிறு என்றே இலக்கியங்களில் குறிப்பிடுவோம். அதோடு திருமுறைகளில் எதிலும் விநாயகர் காப்பு என்பதே இல்லை. இதில் மட்டும் பின்னர் சேர்க்கப்பட்டிருக்கிறது. அதற்கு சான்றாக, தமிழுக்கு விநாயகர் வருவதற்கு முன்பே சேக்கிழார் திருமந்திரம் பற்றி கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.
"ஒன்றவன்றான் என எடுத்து முன்னிய அப்பொருள் மாலைத் தமிழ் மூவாயிரம் சாத்தி"
அதாவது "ஒன்றவன்றான்" என்று ஆரம்பித்து மூவாயிரம் பாடல் கொண்டது திருமந்திரம் என்கிறார். அப்படியானால் விநாயகர் காப்பு பிற்சேர்ப்பு என்பது புலனாகிறது.
அப்போது பிள்ளையார் எங்கிருந்து தான் வந்தார்.
"அவர் ஆரிய கடவுள்" - அதுவும் இல்லை.
அவர் ஆரிய கடவுள் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்றே ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
விநாயகரைப் பற்றி ஆராய்ந்தால் பல ஆச்சரியமான விடயங்கள் கிடைக்கின்றன. சினிமாவில் ஒரே பாட்டில் கதாநாயகன் பணக்காரனாக ஆவது போல், இரண்டே நூற்றாண்டுகளில் விநாயகர் இந்து, புத்த, ஜைன மதங்களின் முழு முதற்கடவுள் ஆகிவிட்டார். அதுவும் எங்கிருந்து? வில்லனின் அடியாளாய் இருந்து கதாநாயகனாய் ஆகி இருக்கிறார்.
மேலும் பல விவரங்களுடன், தொடருகிறேன்.
Labels:
adimurugan,
avm,
ganesa,
history,
pilliayar,
tamil,
vinayagar,
கடவுள்,
தமிழ்,
பிள்ளையார்,
வரலாறு,
விநாயகர்
Friday, January 30, 2015
கவர்னரின் ஹெலிகாப்டர் - புத்தக விமர்சனம்.
புத்தகத்தின் பெயர் : கவர்னரின் ஹெலிகாப்டர்.
ஆசிரியர் : எஸ்.கே.பி. கருணா
வெளியீடு : வம்சி புக்ஸ்.
19, டி. எம்.சாரோன்
திருவண்ணாமலை - 606601.
செல் : 9445870995, 04175-251468
ஓவியங்கள் : ஓவியர் கோபு
விலை : ரூபாய். 200/-
ஆசிரியர் : எஸ்.கே.பி. கருணா
வெளியீடு : வம்சி புக்ஸ்.
19, டி. எம்.சாரோன்
திருவண்ணாமலை - 606601.
செல் : 9445870995, 04175-251468
ஓவியங்கள் : ஓவியர் கோபு
விலை : ரூபாய். 200/-
அனைத்து பிரபல எழுத்தாளர்களும், புதிதாக எழுத வருபவர்களுக்கு கூறும் ஒரே அறிவுரை, "உங்கள் வாழ்க்கையில் நடந்த ஏதாவது ஒரு சுவாரசியமான சம்பவத்தை எழுதிப் பாருங்கள். அதை மீண்டும் மீண்டும் படித்து, அதை மேன்மேலும் எப்படி மெருகூட்டுவது என்று மாற்றி மாற்றி எழுதிப் பாருங்கள்" என்பது தான். அதே போல், விளையாட்டாய் எழுத ஆரம்பித்து, மற்றவர்கள் போல் இல்லாமல், எழுத்தில் சுவாரசியத்தை கூட்ட வெகுச் சீக்கிரமே கற்றுக் கொண்டவர்களில் ஒருவர், SKP கருணா. முதலில் இணையத்தில் எழுத ஆரம்பித்து, பின் கொஞ்சம் கொஞ்சமாக எழுத்தை தன் கைக்குக் கொண்டுவந்து விட்டார். அவரின் கதைகளைப் படிக்கும்போது உண்மை சம்பவம் எது, கற்பனை எது என்பது பிரித்தறியமுடியாதபடி இருப்பது அவருக்கு ஒரு ப்ளஸ். கிட்டத்தட்ட எல்லா கதைகளிலும் நகைச்சுவை இழைந்தோடி இருக்கும்.
இந்த புத்தகத்தில் மொத்தம் 18 கட்டுரைகள் இருக்கிறது. என்னடா இது இவ்வளவு நேரம் கதைகள் என்று கூறிவிட்டு இப்போது கட்டுரைகள் என்று சொல்றானே என்று நினைக்காதீர்கள். முன்னுரை எழுதியுள்ள திரு.அ.முத்துலிங்கம் கூட, முதலில் கட்டுரை என்றுக் குறிப்பிட்டுவிட்டு, கடைசியில் கதை என்று சொல்லுகிறார். இது கட்டுரைக் கதை அல்லது கதைக் கட்டுரை (எது சரி?). என்னைப் பொறுத்தவரை கதை என்றே சொல்கிறேன்.
இதிலுள்ள 18 கதைகளில், 16 கதைகள் ஏற்கனவே அவர் இணையத்தில் எழுதி, நான் முன்பே படித்தது. 2 கதைகள் மட்டுமே (விரல், சாமந்தி) முன்பே படிக்காதது. இணையத்தில் எழுதிய எதையுமே, எடிட் செய்யாமல் அப்படியே கொண்டு வந்ததற்காக பதிப்பகத்தாரைப் பாராட்டலாம். புத்தகம் நல்ல GSMல் பிரிண்ட் செய்யப்பட்டுள்ளது. வடிவமைப்பும் படிப்பதற்கு எளிதாக அமைக்கப்பட்டுள்ளது. ஓவியர் கோபுவின் உள் ஓவியங்கள் செம. மொத்தப் பக்கங்கள் 224.
ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு சுவையை கொண்டுள்ளன. கெட்டகுமாரன், சாமந்தி போன்றவை போகிறபோக்கில் மனதை நெகிழச்செய்கின்றன. உயிர்நீரும், நினைவுகளின் வேரினூடே சில மரங்கள், ததும்பும் நீர் நினைவுகள் போன்றவை, சுற்றுப்புற சூழல் மற்றும் நீரின் அவசியம் குறித்து யோசிக்க வைக்கின்றன. கலர் மானிட்டர், பிரியாணி, விரல் போன்றவை சீரியஸாக உட்பொருள் கொண்டிருந்தாலும் நகைச்சுவை அதிகமாக எழுத்தில் தெறிக்கின்றது. சைக்கிள் டாக்டரும், அட்சயப் பாத்திரமும் முடியும்போது இதயத்தை கணக்கச் செய்கின்றன.
கவர்னரின் ஹெலிகாப்டர் டைட்டில் கதை. கவர்னரை, தன் கல்லூரிக்கு அழைத்து வருவதற்குள் என்னென்ன பாடுப்பட்டார் என்பதே கதை. இதை மட்டும் கொஞ்சம் சுருக்கி இருக்கலாம். மற்றபடி ஓ.கே.
இணையதளத்தில் எழுதுவதற்கும், புத்தகமாக எழுதுவதற்கும் சில வேறுபாடுகள் உண்டு. இன்று நான் என் நாற்பதாவது வயதில் நடக்கும் நிகழ்வுகளை எழுதலாம். படிக்கும் வாசகர்கள் ஒரு நாற்பது வயது இளைஞனை கற்பனை செய்துக் கொள்வார்கள். இரண்டு மாதங்கள் கழித்து என் பள்ளிப் பருவ நிகழ்வுகளை எழுதினால், ஒரு பள்ளி மாணவனை கற்பனை செய்துக் கொள்வார்கள். ஆனால் ஒரு புத்தகமாக படிக்கும்போது, ஒரு நிமிடத்தின் முன் கல்லூரி தலைவராகவும், இந்த நொடியில் ஒரு பள்ளி மாணவனாகவும், மீண்டும் கல்லூரி தரைவராகவும் மாறி மாறி வரும்போது, வாசகனின் மனத்தில் அந்த கற்பனை பாத்திரம் உருவகம் அடைவது சற்று கடினம். இது அந்த கதையின் ரசிப்பையே குறைத்து விடும்.
தொடர்ச்சியாக படிக்கும் போது, அதிலும் வரும் கதாநாயகன் பாத்திரம் ஒரே பெயராக இருக்கும்போது, இந்த உருவகம் சற்று தடுமாறும். அதற்குத் தான் நாவலாசிரியர்கள் பிளாஷ்பேக் பெரியதாக வைக்காமல், சிறிது சிறிதாக வைப்பார்கள். இதில் உள்ள கதைகளை வயதின்படி வரிசைப்படுத்தி இருந்தால் இன்னும் சுவாரசியம் கூடி இருக்கும். சாமந்தி தவிர அனைத்து கதைகளிலும் ஆசிரியரே வருவதால், சாமந்தியை ஒரு துணைக் கதையாக கடைசியாக வைத்திருக்கலாம்.
இந்த விமரிசனத்தை எழுதுவதற்கு ஏண்டா இவ்வளவு நாள் என்றுக் கேட்கலாம். நான் என் சுய விமரிசனத்தை விட, மற்றவர்கள் விமரிசனமும் என்ன என்றுத் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பினேன். இந்த புத்தகத்தை என் கடையில் உள்ள மேஜை மேல் வைத்தேன். கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் நண்பர்கள் இதை எடுத்து படிக்கிறார்களா என்று பார்த்தேன். நிறைய பேர் எடுத்து, கொஞ்சம்(!) படித்தார்கள். அவர்கள் புத்தகத்தை எடுத்து படிக்க வைத்தது எஸ்.கே.பி. கருணா என்ற பெயர் தான் என அறிந்தேன். அவர்கள் படித்துக் கொண்டிருக்கும் போதே, புத்தகத்தின் தலைப்பு என்ன என்று கேட்ட பின் தான் அட்டையை பார்த்து தலைப்பை சொன்னார்கள். (அதில் ஒருவர் கேட்டது சுவாரசியம். "நம்ம கருணா புக்கெல்லாம் எழுதுறாரா? த.மு.எ.க.ச. தலைவர் தானே?". "யோவ் அது கருப்பு கருணாயா, இது எஸ்.கே.பி.கருணா").
இந்த புத்தகத்தை ஒருவரிடம் கொடுத்து, முழுவதும் படிக்க சொன்னேன். அவர் விமர்சனம்.
" நன்றாகத்தான் எழுதி இருக்கிறார். உரையாடல்கள் மிக தெளிவாக, ரியலாக இருக்கிறது. விலை இன்னும் கம்மியாக இருந்தால் வாங்கலாம்."
வேறொருவரை ஒரு நாளைக்கு ஒரு கதை மட்டுமே படிக்க வேண்டும் என்று சொன்னேன். அவர் விமர்சனம்.
"சூப்பரா இருக்குடா. நல்லாத்தான் எழுதி இருக்கிறார். ஒவ்வொண்ணும் ஒவ்வொரு விதம்னாலும், செம ஜோக்கா கதையை கொண்டு போகிறார். சுய கதையை விட்டு வேற கதை எழுதும்போது தான் அவர் திறமை தெரியும்"
இரண்டுக்கும் உள்ள வித்தியாசம். முதலாமவர் கதையை தொடர்ந்துப் படித்தார். இரண்டாமவர் இடைவெளி விட்டுப் படித்தார்.
மொத்தத்தில் மிக நல்ல புத்தகம். கொஞ்சம் கூட போரடிக்காமல், சிரித்துக் கொண்டே இந்த புத்தகத்தை படிக்கலாம். எல்லாவற்றையும் விட, எந்த வித கொச்சை வார்த்தைகளும் புத்தகத்தில் இல்லை. எனவே தைரியமாக இள வயதினரிடம் படிக்க கொடுக்கலாம். அதற்காகவே, கருணாவுக்கு பாராட்டுக்கள்.
Paper Back Edition எப்போ வரும்?
Labels:
book,
governarin,
helicopter,
Karuna,
review,
S.K.P.,
எஸ்.கே.பி.,
கருணா,
கவர்னரின்,
வம்சி,
விமரிசனம்,
ஹெலிகாப்டர்
Subscribe to:
Posts (Atom)