Monday, August 15, 2016

கீழடி - 2300 வருடங்களுக்கு முன் - ஒரு காலப் பயணம்.

கீழடி - சங்கக்காலத்தின் வாயில்.


கீழடி. மதுரைக்கு 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு சிறு கிராமம். என் அடிக்கு (காலடி) கீழே உன் பண்டைய நாகரீகம் இருக்கிறது என்பதாலோ என்னவோ, இந்த பெயர் அந்தக் கிராமத்துக்கு வந்துள்ளது.

வரலாற்றை கண்டுபிடித்த வரலாறு.


2013-2014 இல் சங்கக் கால ஊர்களைக் கண்டுபிடிக்கும் நோக்குடன். வைகை ஆற்றின் கரையோரம் இரு கரைகளிலும், வைகை ஆரம்பிக்கும் வெள்ளி மலையில் இருந்து முடியும் ஆற்றங்கரை வரையில் நான்கு மாவட்டங்களில் (திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் மற்றும் தேனி) 293 இடங்களில் ஆராய்ச்சி செய்யப்பட்டது. இதில் கிட்டத்தட்ட 170 இடங்களில் புதிதாக தொல்லியல் பொருட்கள் கண்டுப்பிடிக்கப்பட்டன. கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் இரும்புக் காலம் முதல் 18ஆம் நூற்றாண்டு வரை சேர்ந்தவையாக இருந்தன. எவ்வளவு கிடைத்தாலும் மக்கள் வாழ்ந்த நகரம் மட்டும் கிடைக்கவே இல்லை. சிறு சிறு கிராமங்கள், மூன்று நான்கு கிராமங்களுக்கு சேர்த்து ஒரு சுடுகாடு என்ற அளவில் மட்டுமே கிடைத்தது. 

சுதந்திரத்துக்கு முன் அகழ்வாராய்ச்சி நடந்த பின், பெரிய அளவில் வைகை ஆற்றின் கரையில் மத்திய அரசோ, தமிழக அரசோ ஆராய்ச்சி எதுவும் நடத்தவில்லை. 1950களில் இந்திய தொல்லியல் துறையை சேர்ந்த திரு. K.V.Raman அவர்கள் தலைமையில், பெரிய குளம், மேலூர், திருமங்கலம் தாலுக்காக்களில் கிராமம் கிராமமாக சர்வே எடுத்து, நிறைய இடங்களை தொல்லியல் இடங்களாக கண்டுப்பிடித்தனர்.

1980களில் தமிழக தொல்லியல் துறை வைகை ஆறு முன்பு கடலுடன் கலந்த இடமும், சங்கக் கால துறைமுகமுமான அழகன்குளம் ஊரில் ஆறு காலக்கட்டங்களில் செய்தது தான் வைகை ஆற்று படுக்கையில் செய்த பெரிய அகழ்வாராய்ச்சி. 2006ஆம் வருடம், மதுரை அருகே உள்ள கோவலன்பொட்டலில், தமிழக தொல்லியல் துறை சில இடங்களைக் கண்டறிந்தது. இருந்தும்,மிகப்பெரிய அளவில் எதுவும் கண்டுப்பிடிக்கப்படவில்லை.

எனவே, வைகை ஆற்றின் கரையோரம், மீண்டும் பெருமளவில் ஆராய்ச்சி செய்திட வேண்டும் என்று மத்திய தொல்லியல் துறையைச் சேர்ந்த திரு. அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்கள் கோரிக்கை விடுத்தார். அவரின் கோரிக்கை ஏற்கப்பட்டு, வைகை ஆற்றின் இரு கரைகளிலும் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு அகழ்வாராய்ச்சி செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இதில் தெரிவு செய்யப்பட்ட 293 இடங்களில் இருந்தும் பானைகள், முதுமக்கள் தாழிகள், செம்பு, வெள்ளி காசுகள், தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பொருட்கள் கிடைத்தாலும், பெரியதாக எதுவும் கிடைக்கவில்லை.

ஆராய்ச்சியின் இறுதிக்கட்டமாக மதுரை நகரை சுற்றி உள்ள இடங்களில் ஆராய்ந்த போது, குகைகளில் வரையப்பட்ட கி.மு.3 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஓவியங்கள், கல்வெட்டுகள் மட்டுமே கிடைத்தன. மதுரை நகரம் முழுவதும் வளர்ந்துவிட்டிருந்தபடியால் நகருக்குள் எதுவுமே கண்டுப்பிடிக்க முடியவில்லை. 

கிட்டத்தட்ட ஆராய்ச்சியை முடிக்கும் தருவாயில், இவர்கள் கீழடி வந்த போது, ஒரு லாரி ஓட்டுனரிடம் இவர்கள் பேசியபோது அவர் அருகிலிருந்த ஒரு தென்னந்தோப்பை காண்பித்து, அங்கே போய் பாருங்கள், வெறும் பானை ஓடுகளாக இருக்கிறது. சில இடங்களில் பெரிய பானைகளும் இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார். இவர்களும் அசுவாரசியமாக அங்கு சென்று பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். எங்குப் பார்த்தாலும் உடைந்த பானை ஓடுகள், சிலவற்றில் ஓவியங்களுடன், பெரிய பெரிய சுட்ட செங்கற்கள் (பெரிய அளவிலான சுட்ட செங்கற்கள் மிகப்பழங்காலத்தில் உபயோகப்படுத்தப்பட்டவை) இருந்தன. உடனே ஒரு JCBயை அழைத்து வந்து இரண்டு தென்னை மரங்களுக்கு இடையேயான இடத்தில் மெதுவாக தோண்ட, அனைவரும் மெய் மறந்தனர். ஆமாம். சங்கக்கால கட்டிடத்தின் இரு சுவர்கள் இணையும் இடத்தைத் தான் அவர்கள் பார்த்தது. 

அப்போது தான் முதன் முதலில் நம் சங்கக்காலமும், நிகழ்காலமும் இணையத் தொடங்கியது.

பள்ளிச்சந்தையில் இருந்து இப்பொழுது வைகை இருக்கும் தூரம்.

தொடரும் . . . . .


No comments:

Post a Comment