Monday, September 21, 2015

பிள்ளை (யார்?) - II - ஆரிய கடவுளா?

பிள்ளையார் ஒரு ஆரிய கடவுளா என்பதை ஆராய, ஆரியர்களின் பழம்பெரும் புத்தகமான வேதங்களை பார்ப்போம்.

ரிக் வேதம்

வேதங்களில் முதன்மையானது வேதம் ரிக் வேதம். ரிக் வேதத்தில் எங்கேயுமே பிள்ளையார் பற்றி இல்லை. இருந்தாலும் ஒரு சிலர், அதில் வரும் ஒரு சுலோகத்தை கணபதியை குறிப்பதாக சொல்லுவார்கள். அது ரிக் வேதம் இரண்டாம் தொகுதியில் 23ஆம் சுலோகமாக வருகிறது. விநாயகர் முழு முதற் கடவுளாக இருக்கும் பட்சத்தில் அவரைப்பற்றி ஏன் 214வது சுலோகத்தில் சொல்ல வேண்டும். அதுவுமில்லாது, ரிக் வேதத்தில் இந்த ஒரு இடத்தில் மட்டுமே பிள்ளையார் வருவதாக கூறுகிறார்கள். அதிலும் இதில் முதல் வரியில் மட்டும். 

இதில் நாம் முக்கியமாக பார்க்க வேண்டியது, இந்த 214 மட்டுமின்றி அடுத்து வரும் 215, 216 மற்றும் 217 ஆகியவை தேவ கணங்களின் தலைவரான் ப்ரஹஸ்பதியை குறிக்கிறது. இது விநாயகரைத் தான் குறிக்கிறது என்று சொல்லுபவர்கள் சுட்டிக்காட்டும் காரணம் அதில் வரும் ஒரு வார்த்தை, "கணபதிம்". இதற்கு என்ன அர்த்தம் கணம்களின் அதிபதி என்று அர்த்தம். கணங்களின் அதிபதி ப்ரஹஸ்பதி என்று முன்னமே வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதிலும் குறிப்பாக பிள்ளையாரின் யானை தலையை பற்றியோ, தொந்தியை பற்றியோ இதில் எந்த குறிப்பும் இல்லை. மேலும், ப்ரஹஸ்பதி கணங்களின் தலைவர், போரில் நல்லவர்களை பாதுகாப்பவர், உடலை, விளைச்சலை பாதுகாப்பவர். செல்வங்களை அளிப்பவர். இவர் இடத்தை தான் பின்னாளில் விநாயகர் பிடித்துக் கொண்டார். இவருக்கும் விநாயகருக்கும் என்ன வித்தியாசம். இவர் முனிவர், மனிதனை போல் உடல் கொண்டவர். இவருக்கு தொந்தியோ, தும்பிக்கையோ கிடையாது.

ப்ரஹஸ்பதியை பாடும் அந்த சுலோகம்

ghaṇānāṃ tvā ghaṇapatiṃ havāmahe kaviṃ kavīnāmupamaśravastamam | 
jyeṣṭharājaṃ brahmaṇāṃ brahmaṇas pata ā naḥ ṣṛṇvannūtibhiḥ sīda sādanam || 

ghaṇānāṃ - கணனம் - கணங்களின்
tvā - தாங்கள்
ghaṇapatiṃ - கணங்களின் தலைவர்.
havāmahe - உங்களை வேண்டுகிறோம்
kaviṃ kavīnām - மெய்யறிவின் மெய்யறிவே
upamaśravastamam - அனைவரை விட புகழுடையவரே.
jyeṣṭharājaṃ  brahmaṇāṃ - வேண்டுதலின் முதல் அரசரே
 brahmaṇas pata ā naḥ - ஓ! ப்ரஹஸ்பதி
ṣṛṇvannūtibhiḥ - எங்கள் வேண்டுதலை கேளுங்கள்.
sīda sādanam - எங்கள் வேள்வியை ஏற்றுக்கொண்டு வந்து அமருங்கள்.

       இதில் எங்கு விநாயகர் வருகிறார்.

ரிக் வேதத்தை பொறுத்தவரை முக்கிய தெய்வங்கள் எனப்படுவது :
இந்திரன், வருணன், அக்னி, ருத்ரன், மித்திரன், வாயு, சூர்யன், விஷ்ணு, சாவித்ரி, பூசன், உஷா, சோமா, அஸ்வின் (2 பேர்), மாருத், எட்டு திசைகள், 12 ஆதித்யர்கள், வசிஷ்டா, ப்ரஹஸ்பதி, யமன், மன்யு, புருஷா,சரஸ்வதி, .. இப்படி செல்கிறது. இதில் எங்கேயும் விநாயகர் இல்லை.

அதற்காக பிள்ளையார் வேதங்களில் எங்கேயும் இல்லை என்று நான் சொல்லவில்லை. இருக்கிறார். ஆனால் தெய்வங்களைப் பற்றி குறிப்பிடும் ரிக் வேதத்தில் இல்லை.

வேறெங்கு இருக்கிறார் என்று அடுத்து பார்க்கலாம்.

Wednesday, September 16, 2015

பிள்ளை - (யார்)? - I

பொறுப்பு துறப்பு : எனக்கு கிடைத்த தகவல்கள், உண்மையாக இருக்குமா என்று எனக்கிருக்கும் சிறு ஆறாவது அறிவை உபயோகித்து பிரித்தறிந்து, என் மனம் ஒத்துக் கொண்டதை மட்டுமே இங்கே எழுதுகிறேன். நான் நாத்திகனோ, ஆத்திகனோ அல்ல. நான் எந்த இசத்தையும் சார்ந்தவனில்லை. உங்களுக்கு நான் எழுதுவதில் மாற்றுக் கருத்து இருப்பின், கட்டாயம் இங்கே பகிரலாம், வரம்புக்கு உட்பட்டு. தயவு செய்து உணர்ச்சி மிகுந்த வார்த்தைகளை தவிர்க்கவும்.

 பிள்ளையார் சதுர்த்தி வந்து விட்டது. எல்லோரும் கொழுக்கட்டை சாப்பிடவும், குழந்தைகள் களிமண் வைத்து விளையாடவும் ஆசையாய் இருப்பார்கள். பிள்ளையார் சதுர்த்தி பற்றி எழுதலாமே என்று தான் முதலில் யோசித்தேன். ஆனால் எண்ணங்கள் எங்கெங்கோ போய் கடைசியில் பிள்ளையார் பிடிக்க குரங்காய் போனது. பிள்ளையார் எப்படி முழு முதற்  கடவுள் ஆனார்? ஏன் தமிழ் கடவுள் முருகன், முழு முதற் கடவுள் ஆகவில்லை? என்று யோசித்துக் கொண்டே, என்னிடம் உள்ள பழைய சங்க இலக்கியங்களில் எங்காவது பிள்ளையார் பற்றி குறிப்பு இருக்கிறதா என்று தேடிய போது, எங்கேயும் காணவில்லை. அப்போ பிள்ளையார் எங்கிருந்து வந்தார் என்று இணையங்களில் உலா வந்தேன். நான் படித்து, புரிந்துக் கொண்டதின் சாராம்சம் இது.

நமது தமிழ் சங்கத்தை பொறுத்த வரையில், ஐந்து நிலங்களுக்கான கடவுள்கள் ஐந்து தான். அவை,

குறிஞ்சி  - முருகன்
முல்லை - திருமால் (இவர் எப்படி ஆரியன் ஆனார் என்று தெரியவில்லை)
மருதம் - இந்திரன்
நெய்தல் - வருணன்
பாலை - கொற்றவை

கி.மு. 1000 முதல் கி.மு.300 வரை உள்ள வருடங்களில் எழுதப்பட்டதாக சொல்லப்படும் தொல்காப்பியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது இது. இதில் விநாயகரைப் பற்றி எந்த குறிப்பும் இல்லை.

தமிழின் ஐம்பெரும் காப்பியங்களிலும் முழு முதற்கடவுளான பிள்ளையாரைப் பற்றி எங்கேயும் இல்லை.

தமிழகத்தில் கண்டெடுக்கப்பட்ட கோயில்களில் மிகவும் பழையதான மாமல்லபுரம் அருகில் இருக்கும் சுப்பிரமணியர் கோயிலிலும் பிள்ளையார் இல்லை.

நான் அறிந்த வரையில் தமிழ் இலக்கியங்களில் பிள்ளையார் முதலில் வந்தது, திருமூலர் எழுதிய திருமந்திரத்தில் தான். ஆனால் அந்த பாடலும் பிற்சேர்க்கை தான், மூல புத்தகத்தில் அந்த பாடல் இல்லை என்று தமிழ் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

ஐந்து கரத்தினை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை

என்ற வரிகளில் உள்ள இந்தி என்ற வார்த்தை வட மொழி சொல். யானை என்பதை நாம் களிறு என்றே இலக்கியங்களில் குறிப்பிடுவோம். அதோடு திருமுறைகளில் எதிலும் விநாயகர் காப்பு என்பதே இல்லை. இதில் மட்டும் பின்னர் சேர்க்கப்பட்டிருக்கிறது. அதற்கு சான்றாக, தமிழுக்கு விநாயகர் வருவதற்கு முன்பே சேக்கிழார் திருமந்திரம் பற்றி கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

"ஒன்றவன்றான் என எடுத்து முன்னிய அப்பொருள் மாலைத் தமிழ் மூவாயிரம் சாத்தி"

அதாவது "ஒன்றவன்றான்" என்று ஆரம்பித்து மூவாயிரம் பாடல் கொண்டது திருமந்திரம் என்கிறார். அப்படியானால் விநாயகர் காப்பு பிற்சேர்ப்பு என்பது புலனாகிறது.

அப்போது பிள்ளையார் எங்கிருந்து தான் வந்தார்.

"அவர் ஆரிய கடவுள்" - அதுவும் இல்லை.

அவர் ஆரிய கடவுள் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்றே ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

விநாயகரைப் பற்றி ஆராய்ந்தால் பல ஆச்சரியமான விடயங்கள் கிடைக்கின்றன. சினிமாவில் ஒரே பாட்டில் கதாநாயகன் பணக்காரனாக ஆவது போல், இரண்டே நூற்றாண்டுகளில் விநாயகர் இந்து, புத்த, ஜைன மதங்களின் முழு முதற்கடவுள் ஆகிவிட்டார். அதுவும் எங்கிருந்து? வில்லனின் அடியாளாய் இருந்து கதாநாயகனாய் ஆகி இருக்கிறார்.

மேலும் பல விவரங்களுடன், தொடருகிறேன்.

Friday, January 30, 2015

கவர்னரின் ஹெலிகாப்டர் - புத்தக விமர்சனம்.

     புத்தகத்தின் பெயர் : கவர்னரின் ஹெலிகாப்டர்.
     ஆசிரியர் : எஸ்.கே.பி. கருணா
     வெளியீடு : வம்சி புக்ஸ்.
                              19, டி. எம்.சாரோன்
                              திருவண்ணாமலை - 606601.
                              செல் : 9445870995, 04175-251468
     ஓவியங்கள் : ஓவியர் கோபு
     விலை       : ரூபாய். 200/-

     அனைத்து பிரபல எழுத்தாளர்களும், புதிதாக எழுத வருபவர்களுக்கு கூறும் ஒரே அறிவுரை, "உங்கள் வாழ்க்கையில் நடந்த ஏதாவது ஒரு சுவாரசியமான சம்பவத்தை எழுதிப் பாருங்கள். அதை மீண்டும் மீண்டும் படித்து, அதை மேன்மேலும் எப்படி மெருகூட்டுவது என்று மாற்றி மாற்றி எழுதிப் பாருங்கள்" என்பது தான். அதே போல், விளையாட்டாய் எழுத ஆரம்பித்து, மற்றவர்கள் போல் இல்லாமல், எழுத்தில் சுவாரசியத்தை கூட்ட வெகுச் சீக்கிரமே கற்றுக் கொண்டவர்களில் ஒருவர், SKP கருணா. முதலில் இணையத்தில் எழுத ஆரம்பித்து, பின் கொஞ்சம் கொஞ்சமாக எழுத்தை தன் கைக்குக் கொண்டுவந்து விட்டார். அவரின் கதைகளைப் படிக்கும்போது உண்மை சம்பவம் எது, கற்பனை எது என்பது பிரித்தறியமுடியாதபடி இருப்பது அவருக்கு ஒரு ப்ளஸ். கிட்டத்தட்ட எல்லா கதைகளிலும் நகைச்சுவை இழைந்தோடி இருக்கும்.

     இந்த புத்தகத்தில் மொத்தம் 18 கட்டுரைகள் இருக்கிறது. என்னடா இது இவ்வளவு நேரம் கதைகள் என்று கூறிவிட்டு இப்போது கட்டுரைகள் என்று சொல்றானே என்று நினைக்காதீர்கள். முன்னுரை எழுதியுள்ள திரு.அ.முத்துலிங்கம் கூட, முதலில் கட்டுரை என்றுக் குறிப்பிட்டுவிட்டு, கடைசியில் கதை என்று சொல்லுகிறார். இது கட்டுரைக் கதை அல்லது கதைக் கட்டுரை (எது சரி?). என்னைப் பொறுத்தவரை கதை என்றே சொல்கிறேன்.

     இதிலுள்ள 18 கதைகளில், 16 கதைகள் ஏற்கனவே அவர் இணையத்தில் எழுதி, நான் முன்பே படித்தது. 2 கதைகள் மட்டுமே (விரல், சாமந்தி) முன்பே படிக்காதது. இணையத்தில் எழுதிய எதையுமே, எடிட் செய்யாமல் அப்படியே கொண்டு வந்ததற்காக பதிப்பகத்தாரைப் பாராட்டலாம். புத்தகம் நல்ல GSMல் பிரிண்ட் செய்யப்பட்டுள்ளது. வடிவமைப்பும் படிப்பதற்கு எளிதாக அமைக்கப்பட்டுள்ளது. ஓவியர் கோபுவின் உள் ஓவியங்கள் செம. மொத்தப் பக்கங்கள் 224.

    ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு சுவையை கொண்டுள்ளன. கெட்டகுமாரன், சாமந்தி போன்றவை போகிறபோக்கில் மனதை நெகிழச்செய்கின்றன. உயிர்நீரும், நினைவுகளின் வேரினூடே சில மரங்கள், ததும்பும் நீர் நினைவுகள் போன்றவை, சுற்றுப்புற சூழல் மற்றும் நீரின் அவசியம் குறித்து யோசிக்க வைக்கின்றன. கலர் மானிட்டர், பிரியாணி, விரல் போன்றவை சீரியஸாக உட்பொருள் கொண்டிருந்தாலும் நகைச்சுவை அதிகமாக எழுத்தில் தெறிக்கின்றது. சைக்கிள் டாக்டரும், அட்சயப் பாத்திரமும் முடியும்போது இதயத்தை கணக்கச் செய்கின்றன. 

     கவர்னரின் ஹெலிகாப்டர் டைட்டில் கதை. கவர்னரை, தன் கல்லூரிக்கு அழைத்து வருவதற்குள் என்னென்ன பாடுப்பட்டார் என்பதே கதை. இதை மட்டும் கொஞ்சம் சுருக்கி இருக்கலாம். மற்றபடி ஓ.கே.

     இணையதளத்தில் எழுதுவதற்கும், புத்தகமாக எழுதுவதற்கும் சில வேறுபாடுகள் உண்டு. இன்று நான் என் நாற்பதாவது வயதில் நடக்கும் நிகழ்வுகளை எழுதலாம். படிக்கும் வாசகர்கள் ஒரு நாற்பது வயது இளைஞனை கற்பனை செய்துக் கொள்வார்கள். இரண்டு மாதங்கள் கழித்து என் பள்ளிப் பருவ நிகழ்வுகளை எழுதினால், ஒரு பள்ளி மாணவனை கற்பனை செய்துக் கொள்வார்கள். ஆனால் ஒரு புத்தகமாக படிக்கும்போது, ஒரு நிமிடத்தின் முன் கல்லூரி தலைவராகவும், இந்த நொடியில் ஒரு பள்ளி மாணவனாகவும், மீண்டும் கல்லூரி தரைவராகவும் மாறி மாறி வரும்போது, வாசகனின் மனத்தில் அந்த கற்பனை பாத்திரம் உருவகம் அடைவது சற்று கடினம். இது அந்த கதையின் ரசிப்பையே குறைத்து விடும். 

     தொடர்ச்சியாக படிக்கும் போது, அதிலும் வரும் கதாநாயகன் பாத்திரம் ஒரே பெயராக இருக்கும்போது, இந்த உருவகம் சற்று தடுமாறும். அதற்குத் தான் நாவலாசிரியர்கள் பிளாஷ்பேக் பெரியதாக வைக்காமல், சிறிது சிறிதாக வைப்பார்கள். இதில் உள்ள கதைகளை வயதின்படி வரிசைப்படுத்தி இருந்தால் இன்னும் சுவாரசியம் கூடி இருக்கும். சாமந்தி தவிர அனைத்து கதைகளிலும் ஆசிரியரே வருவதால், சாமந்தியை ஒரு துணைக் கதையாக கடைசியாக வைத்திருக்கலாம்.

     இந்த விமரிசனத்தை எழுதுவதற்கு ஏண்டா இவ்வளவு நாள் என்றுக் கேட்கலாம். நான் என் சுய விமரிசனத்தை விட, மற்றவர்கள் விமரிசனமும் என்ன என்றுத் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பினேன். இந்த புத்தகத்தை என் கடையில் உள்ள மேஜை மேல் வைத்தேன். கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் நண்பர்கள் இதை எடுத்து படிக்கிறார்களா என்று பார்த்தேன். நிறைய பேர் எடுத்து, கொஞ்சம்(!) படித்தார்கள். அவர்கள் புத்தகத்தை எடுத்து படிக்க வைத்தது எஸ்.கே.பி. கருணா என்ற பெயர் தான் என அறிந்தேன். அவர்கள் படித்துக் கொண்டிருக்கும் போதே, புத்தகத்தின் தலைப்பு என்ன என்று கேட்ட பின் தான் அட்டையை பார்த்து தலைப்பை சொன்னார்கள். (அதில் ஒருவர் கேட்டது சுவாரசியம். "நம்ம கருணா புக்கெல்லாம் எழுதுறாரா? த.மு.எ.க.ச. தலைவர் தானே?". "யோவ் அது கருப்பு கருணாயா, இது எஸ்.கே.பி.கருணா").

     இந்த புத்தகத்தை ஒருவரிடம் கொடுத்து, முழுவதும் படிக்க சொன்னேன். அவர் விமர்சனம்.
" நன்றாகத்தான் எழுதி இருக்கிறார். உரையாடல்கள் மிக தெளிவாக, ரியலாக இருக்கிறது. விலை இன்னும் கம்மியாக இருந்தால் வாங்கலாம்."

     வேறொருவரை ஒரு நாளைக்கு ஒரு கதை மட்டுமே படிக்க வேண்டும் என்று சொன்னேன். அவர் விமர்சனம்.
"சூப்பரா இருக்குடா. நல்லாத்தான் எழுதி இருக்கிறார். ஒவ்வொண்ணும் ஒவ்வொரு விதம்னாலும், செம ஜோக்கா கதையை கொண்டு போகிறார். சுய கதையை விட்டு வேற கதை எழுதும்போது தான் அவர் திறமை தெரியும்"

     இரண்டுக்கும் உள்ள வித்தியாசம். முதலாமவர் கதையை தொடர்ந்துப் படித்தார். இரண்டாமவர் இடைவெளி விட்டுப் படித்தார்.

     மொத்தத்தில் மிக நல்ல புத்தகம். கொஞ்சம் கூட போரடிக்காமல், சிரித்துக் கொண்டே இந்த புத்தகத்தை படிக்கலாம். எல்லாவற்றையும் விட, எந்த வித கொச்சை வார்த்தைகளும் புத்தகத்தில் இல்லை. எனவே தைரியமாக இள வயதினரிடம் படிக்க கொடுக்கலாம். அதற்காகவே, கருணாவுக்கு பாராட்டுக்கள்.

     Paper Back Edition எப்போ வரும்?

Wednesday, January 28, 2015

இந்திய விவசாயமும். கார்பரேட் கறை படிந்த ஆராய்ச்சிகளும்.

     நேற்றுத் தான் 25.01.2015 அன்று ஒளிப்பரப்பட்ட "நீயா நானா" நிகழ்ச்சியை பார்க்க முடிந்தது. அதில் அறிவியல் பக்கம் பேசியவர்கள், அறிவியல் ஆராய்ச்சி முடிவுகள் இதை சொல்கின்றன, அதை சொல்கின்றன என்று பேசினார்கள். ஏன் கார்பரேட் கம்பனிகளுக்கு எதிராக எந்த ஒரு ஆராய்ச்சி முடிவுகளும் இல்லை என்பது அவர்கள் வாதம். கார்பரேட் கம்பனிகளின் பொருட்களை நீங்கள் ஆராய்ச்சி செய்யவே முடியாது. அவ்வாறு ஆராய்ச்சி செய்வதை எந்த ஒரு அறிவியல் அமைப்பும் ஏற்றுக் கொள்ளாது. ஏனெனில் அந்த அறிவியல் அமைப்புகளுக்கு பணம் தருவதே இந்த கார்பரேட் கம்பனிகள் தான். எனக்கு தெரிந்த சில விஷயங்கள்.

     1991-92 ஆம் ஆண்டு. என் மனைவி ஒரு கல்லூரியில், B.Sc. (Chemistry) படித்துக் கொண்டிருந்த நேரம். அது ஒரு தனியார் பெண்கள் கல்லூரி.அவரின் பேராசிரியர் ஒரு ஆராய்ச்சி செய்துக் கொண்டிருந்தார். "Adulteration in Chicken" என்பது அந்த ஆராய்ச்சியின் தலைப்பு. என் மனைவியும், அதற்க்கு மாணவர் உதவியாளராக இருந்தார். ஆம்பூர், வாணியம்பாடி போன்ற ஊர்களில் இருக்கும், தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் இருந்து கொட்டப்படும், தோல் கழிவுகள் தான் நாம் உண்ணும் ப்ராய்லர் கோழிகளுக்கு உணவாக எடுத்துச் செல்லப்படுகின்றன. இந்த கழிவுகள் அனைத்தும் தோல் பதப்படுத்தப்பட்ட பின் மீதமான கழிவுகள். தோல் பதப்படுத்தபடுவதற்க்கு என்னென்ன ரசாயனங்களை நாம் உபயோகப்படுத்துகிறோம் என்று தெரியும். அவை நீரில் கலந்தாலே நிலம் எவ்வளவு மாசடைகிறது என்றும் நமக்கும், அரசுக்கும் தெரியும். ஆனால், இந்த கழிவுகளை உண்ணும் கோழிகளை நாம் சாப்பிடும்போது என்னென்ன ரசாயனகள் நம் உடலுக்குள் செல்கின்றன என்பது நாம் அறியாதது. அந்த ஆராய்ச்சியின் முடிவுகள் பயங்கரமாக இருந்தன. ஆனால், தோல் பதமிடுபவரகளும், கோழி கார்பரேட்களும் சேர்ந்து அந்த ஆராய்ச்சியின் முடிவுகளை வெளியே வர விடாமல் செய்து விட்டனர். கடுமையான மிரட்டல்களுக்கு பயந்து, அவர்கள் பெண்கள் என்பதால், அந்த ஆராய்ச்சியை வெளியிடாமல் மூடி வைத்து விட்டனர்.

     அடுத்து அவர்கள் கையில் எடுத்தது, "Adulteration in Milk". இதை எடுக்கும்போது அப்படியெல்லாம் ஒன்னும் பெரிய முடிவுகள் வராது என்றும் இது மிகவும் பாதுகாப்பான ஒரு ஆராய்ச்சி என்றும் நினைத்து தான் எடுத்தார்கள். ஆனால் இதன் முடிவுகள் முன்பை விட பயங்கரமாக இருந்தன. நாம் அருந்தும் பால் பாலே அல்ல என்பதும் அது வெறும் ரசாயன கலவை என்பதும் தெரிய வந்தது. இதை மோப்பம் பிடித்த பால் கார்பரேட்கள், மறுபடியும் மிரட்டத் தொடங்கினார்கள். இதில் கொடுமை என்னவென்றால், அரசு நிறுவனமான ஆவின் பாலிலும் ரசாயன கலவைகள் இருந்தது. இதை அறிந்ததும் தனியார் கார்பரேட்கள் அரசு அதிகாரிகளுடன் கைக்கோர்க்க ஆரம்பித்தார்கள். அரசு தரப்பில் இருந்து அரசு அதிகாரிகளால் மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த முறை பின் வாங்காமல் எப்படியும் வெளியிட்டு விடுவது என்று அவர்கள் முடிவெடுத்த போது, வேறு வழியில் அரசு மிரட்ட ஆரம்பித்தது. இந்த ஆராய்ச்சி முடிவுகள் வெளிவந்தால் அது ஆவினுக்கு கெட்ட பெயரை உண்டாக்கும். அது மறைமுகமாக அரசையும் பாதிக்கும் எனவே இந்த ஆராய்ச்சியை நிறுத்துங்கள் என்று அரசு அதிகாரிகள் மிரட்டினர். அந்த கல்லூரி தாளாளரை கூப்பிட்டு, இந்த ஆராய்ச்சி முடிவுகள் வெளி வந்தால், நீங்கள் நடத்தும் அனைத்து கல்வி நிறுவனங்களையும் அரசே ஏற்று நடத்த வேண்டி வரும் என்று மிரட்டியது. வேறு வழியின்றி, அந்த ஆராய்ச்சியும் முடக்கப்பட்டது.

     இப்படி மாநில அளவிலான கம்பனிகளே, ஆராய்ச்சியை முடக்க முடியும் எனும் போது, உலகளவில் இருக்கும் கார்பரேட்களின் பலம் என்ன என்பது சொல்லத் தேவை இல்லை. ஒவ்வொரு கார்பரேட்டும், அவர்கள் சார்ந்த தொழிலில் உள்ள ஆராய்ச்சி கூடத்தை தத்து எடுத்துக் கொள்கிறார்கள். எனவே அவர்களுக்கு சாதகமாகத்தான் ஆராய்ச்சி முடிவுகள் வரும். அரசு ஒரு நடுநிலைமையான ஆராய்ச்சி அமைப்பை உருவாக்க வேண்டும் என்றாலும் அதிலும், அரசியல், அரசு போன்ற குறிக்கீடுகள் இல்லாத ஒரு ஆராய்ச்சி நடக்கும் என்பது சந்தேகமே.

     கடைசியாக, அறிவியல் முடிவுகள் என்பது ஒன்றும் சத்தியமான உண்மை கிடையாது, அதுவும் ஒரு மூட நம்பிக்கை தான், அது தவறு என்று வேறொருவர் நிருபிக்கும்வரை. ஆனால் எனக்கு தெரிந்தவரையில், இப்போதெல்லாம் அறிவியல் மதத்தை சேர்ந்தவர்கள் தான், அதிக மதவெறி பிடித்து, மூட நம்பிக்கையில் அலைகிறார்கள்.

Friday, January 23, 2015

அச்சில் ஏற்ற முடியா வார்த்தைகள்.

நான் தமிழைப் படிக்க ஆரம்பித்தது என் ஏழு வயதில். அப்பொழுதெல்லாம் என் பெற்றோர் படிக்க உற்சாகப்படுத்துவார்கள். தீபாவளிக்கு ஒரு மத்தாப்புக் கூட வேண்டாம் என்று சொல்லி விட்டு அந்த காசில், பாரதியார் கவிதைகளும், திருக்குறள் மு.வ. உரைநடை புத்தகமும், அப்போதிருந்த 16 கால் மண்டபத்தில் இருந்த புத்தகக் கடையில் வாங்கித் தரச் சொன்னேன். வீட்டை விட்டு வெளியே செல்லாமல், அந்த தீபாவளி பாரதியுடனே கழிந்தது. அடுத்து ராமாயணம், மகாபாரதம் என்று காவியங்களை படிக்க ஆரம்பித்தேன். மகாபாரதத்தை வீட்டில் படிக்கக் கூடாது என்று பெரிய கோயிலுக்கு அனுப்புவார்கள். பெரிய கோயிலில் மூலஸ்தானம் வெளியே உள்ள விளக்கைக் கூட அப்பொழுதெல்லாம் ஏற்ற மாட்டார்கள். யாராவது எண்ணெய் அளித்தால் ஏற்றப்படும். சில நேரங்களில் காலை அபிஷேகம் முடித்து விட்டு அய்யர் எங்காவது சென்று விடுவார். நாம் தான் அண்ணாமலையாருக்கு காவல்.

கிட்டத்தட்ட எல்லா வார, மாத இதழ்களையும் படித்திருப்பேன். டேனிஷ் மிஷன் பள்ளி எதிரில் உள்ள பொது நூலகம் தான் சாயங்கால கோயில். ஆரம்பத்தில், அங்கிருந்த நூலகர், நாம் உள்ளே நுழையும் போதே, ஏதோ பள்ளித் தலைமை ஆசிரியர் போல, உர்ரென்று முறைப்பார். கண் கொத்தி பாம்பு போல, நம்மை கவனித்துக் கொண்டே இருப்பார். நாம் நிறைய புத்தகங்களைப் படிப்பதையும், எடுத்த புத்தகத்தை எடுத்த இடத்தில் ஒழுங்காக வைப்பதையும் பார்த்தோ என்னவோ, சிறிது காலம் கழித்து நம்மைக் கண்காணிப்பதை விட்டு விட்டார். சில மாதங்களுக்குப் பிறகு, பெரியவர்கள் படிக்கும் சில புத்தகங்களைக் கேட்டால், எடுத்து வந்து கொடுத்து, படித்துவிட்டு தன்னிடமே தர வேண்டும் என்று அடிக்குரலில் சொல்லிவிட்டு போவார். இப்படியாகத் தான் தமிழ் இலக்கியம் எனக்கு அறிமுகமானது.

பிளஸ் ஒன் படிக்கும்போது, நகராட்சி ஆண்கள் பள்ளியில் தான் முதன் முதலில், பாலியல் புத்தகங்கள் எனக்கு அறிமுகமாயின (சினி மித்ரா மற்றும் சரோஜாதேவி). அதில் உள்ள சில வார்த்தைகள், நாம் தெருவில் நடந்து போகும்போது கேட்டிருக்கிறோம் என்றாலும், நாம் அதை பேசுவதோ, மனதில் நினைப்பதோ இல்லை. அந்த வயதில் அதைப் படிக்கும்போது கிளர்ச்சியாக இருந்தாலும், அது யாருமறியா தனிமையில் முடிந்து விடுகிறது. வெளியே வரும்போது அந்த வார்த்தைகள் மனதில் இருந்து வெளியில் வருவதில்லை.

நான் Central Polytchinic, Adyarஇல் படித்துக் கொண்டிருந்தபோது, என்னுடன் ஆவடியில் இருந்து வரும் ஒருவன் படித்துக் கொண்டிருந்தான். நான் சில நாவல்களை என்னுடன் எடுத்துக் கொண்டு போவதைப் பார்த்து, "இதெல்லாமா படிக்கிறாய். வீட்டில் திட்ட மாட்டார்களா?" என்றான். "படிப்பதற்கு ஏண்டா வீட்டில் திட்டுவார்கள்", என்று நானும் ஆச்சரியமாக கேட்க அவன் சொன்னது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

"எங்கள் வீட்டில் இதெல்லாம் படிக்க விட மாட்டார்கள். குழந்தைகள் புத்தகம் தான். வார இதழ்கள் என்றால், தினமலர் சிறுவர் மலர் தான். அதைக் கூட என் அம்மா ஒரு முறைப் புரட்டிப் பார்த்து, ஏதாவது படம் அசிங்கமாக (?) இருந்தால் அதைக் கத்தரித்துவிட்டுத் தான் தருவார்கள்", என்றான். சந்தேகப்பட்டு அவனின் வீட்டிற்க்கே சென்று பார்த்து உண்மையென தெரிந்துக் கொண்டேன். வீட்டிலேயே சென்சார். அதுவும் ஒரு இருபது வயது பையனுக்கு. என்ற போது மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

எங்கள் வீட்டில், ஒரு சிறிய நூலகம் உண்டு. என் மகனோ, மகளோ அந்த பக்கமே போவதில்லை என்று எனக்கு மிகவும் வருத்தம் உண்டு. அவர்களுக்கு படிக்கும் ஆசையை உண்டு பண்ண நாங்களும் தலைகீழாக நின்று பார்க்கிறோம். இப்போது தான் படிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். நான் நிறைய புத்தகங்களை வாங்கிக் கொண்டு வந்து நூலகத்தில் சேர்க்கும்போது, என் மனைவிக் கேட்டாள்,

"இந்தப் புத்தகங்களை எல்லாம் குழந்தைகள் படிக்கலாமா? எதுக்கும் நீங்கள் ஒரு முறை படித்து விட்டு தவறான வார்த்தைகள் எதுவும் இல்லை என்றால் இங்கே வையுங்கள். இல்லை என்றால், உங்கள் கடையிலேயே வைத்துக் கொள்ளுங்கள். இங்கே பசங்க கண்ணில் படும்படி வேண்டாம்".

எனக்கு ஆவடி நண்பனின் நினைவு வந்தது. "ஏன் படிக்கக் கூடாத புத்தகம் என்று ஏதாவது இருக்குதா, என்ன?".

"ஏன் இல்லை. இப்போது வரும் நாவல்களில் பெரும்பான்மையானவை, கீழ்த்தர வார்த்தைகளை சர்வ சாதாரணமாக சொல்கின்றன(!). அதுவும் நீங்கள் கொண்டாடும் முற்போக்கு நாவல்கள் எல்லாம் ஒரு பொது இடத்தில் சத்தம் போட்டு படிக்க முடியுமா? பக்கத்துக்கு நாலு வார்த்தையாவது அசிங்கமாகத்தான் வருகிறது."

"இந்த வார்த்தைகள் எல்லாம் பசங்க கேட்டே இருக்க மாட்டாங்களா என்ன?"

"நிச்சயம் கேட்டு இருப்பார்கள். ஏன் நீங்களும் குழந்தையாக இருக்கும்போது கேட்டுத்தான் இருப்பீர்கள். அதற்காக அதை வீட்டில் குழந்தைகள் எதிரில் பேசுவீர்களா? ஒரு வார்த்தையை கேட்பதற்கும், படிப்பதற்கும் குழந்தைகளைப் பொறுத்தவரை வித்தியாசம் உண்டு. குழந்தைகளுக்கு வெளியில் இருப்பவர் பேசுவது மனதில் பதியாது. அதே வீட்டில் டீவீயில் வரும் வசனம் உடனே மனதில் பதியும். குழந்தையை பொறுத்தவரை அது கற்பதற்கான சூழல், வீடு மட்டுமே. வீட்டில் நீங்கள் பேசுவது தான் அது மனதில் பதியும். பள்ளிக்கூடமும் அப்படித்தான். புத்தகங்களும் அப்படித்தான். எங்கள் பள்ளியில் படிக்கும் ஒன்றாவது சிறுவன் கூட காதுக் கொடுத்து கேட்க முடியாதபடி பேசுகிறான். அதற்க்கு காரணம் வீடு. அந்தக் குழந்தைகள் வீட்டிலேயே அந்த வார்த்தைகளை கேட்பதால் தான் இப்படி பேசுகின்றன. நல்ல படியாக வளர்ந்த குழந்தைகள் கூட பள்ளியில் கூடப் படிக்கும் குழந்தைகளிடமிருந்து கற்றுக் கொள்கின்றன. பள்ளியும் குழந்தைக்கு ஒரு கற்பதற்கான சூழல் என்பதால் தான் இது".

நிச்சயமான வார்த்தைகள். இப்போது வரும் நாவல்களில் பெரும்பாலும் இந்த கொச்சை வார்த்தைகள் இல்லாமல் வருவதில்லை. இணையங்களில் இருக்கும் பெரும் எழுத்தாளர்கள் கூட மகாக்கேவலமாக கீழ்த்தர வார்த்தைகளை எழுதுகிறார்கள். கேட்டால் ஒருவன் கோபப்படும்போது இது போன்ற வார்த்தைகள் வருவது இயல்பு என்று ஒரு சப்பக்கட்டு வேற.

போறப்போக்கைப் பார்த்தால், இப்படிப்பட்ட வார்த்தைகளை வளரும் சமுதாயத்திற்கு அறிமுகப்படுத்தி, அதை பேச, எழுத, ஊக்கப்படுத்தி, இவர்கள் முற்போக்கு எழுத்தாளர்கள் என்ற பெயரில் வருங்கால சந்ததியை கீழ்த்தர மாக்களாக மாற்றுவதற்கு பதில், அவர்கள் படிக்கும் பழக்கம் இல்லாமலேயே இருக்கலாம் போலிருக்கு.

ஒரு எழுத்தாளர் கோபப்பட்டு சொன்னார். "இதனால் தாண்டா தமிழன் முன்னேறவே மாட்டேன் என்கிறான். மேலை நாடுகளில் பார். அங்கே அனைத்து வார்த்தைகளும் எல்லா தரப்பு கதைகளிலும் பரவி இருக்கும். இங்கே தான் ரொம்ப போர்த்தி இருக்கீங்க."

"இங்கே யாரும் இந்தியாவை அமெரிக்கா ஆக்க விரும்பவில்லை. நாங்கள் நாகரிக மனிதனாகவும், எங்கள் அடுத்த தலைமுறை நல்ல விஷயங்களை பற்றி மட்டுமே படித்து, பண்புள்ள மக்களாகவே இருந்து விட்டுப் போகட்டும். எந்த முன்னேற்றமும், முற்போக்கும் வேண்டாம். முதலில் ஒரு புத்தகம் பிரசுரிக்கும்போது, அது எந்த பிரிவு வயதினருக்கு என்று போடுங்கள். அதில் கொச்சை கீழ்த்தர வார்த்தைகள் இருக்கிறதா என்பதையும் தெரிவியுங்கள். அப்போது தான் இந்த புத்தகத்தை தனக்காக வாங்குவதா, பசங்களுக்காக வாங்குவதா என்பதை நாங்கள் முடிவெடுக்க முடியும். ஒவ்வொரு புத்தகத்திறக்கும் காசு கொடுத்து எங்களையே சென்சாரும் பண்ண வைக்காதீர்கள்".

ஒரு அடிமட்ட குடும்பத்தினர் படும் கஷ்டங்களை, எங்கோ பெருநகரத்தில், பதினாலாவது மாடியில், குளிரூட்டப்பட்ட தனி அறையில் படிக்கும் ஒரு குழந்தைக்கு, சிறு வயதிலேயே தெரிய வேண்டும். அதை உங்களின் சில வார்த்தைகளால் அவர்களுக்கு சென்றடையாமல் இருக்க வேண்டுமா? நல்ல சிந்தனைகள் அனைவரையும் சென்றடைய ஆவன செய்யுங்களேன், தோழர்களே.

அச்சில் ஏற்ற முடியா வார்த்தைகள் - இதை மீண்டும் கொண்டு வருவோம், வளரும் இளைய தலைமுறையினரின் வளமான வாழ்க்கைக்காக.

Tuesday, January 20, 2015

கவர்னரின் ஹெலிகாப்டர் - புத்தக (அட்டை) விமர்சனம்.- I


சென்னை புத்தகக் கண்காட்சியின் உள்ளே நுழையும் முன்பே என் மகனிடம் சொல்லி விட்டேன். "எஸ்.கே.பி. கருணாவின் புத்தகம் கவர்னரின் ஹெலிகாப்டர் கண்ணில் பட்டால் சொல்லு. வாங்க வேண்டும்". உள்ளே நுழைந்து கிட்டத்தட்ட நூறு ஸ்டால்களைக் கடந்து, கிலோக்கணக்கில் புத்தகங்களை சுமந்துக்கொண்டு, பாதி ஸ்டால்களை சுற்றி வருவதற்குள் அவன் தளர்ந்து விட்டான். புத்தகங்களைப் பற்றியோ, புத்தகப் பதிப்பகங்களைப் பற்றியோ அவனுக்கு எதுவுமே தெரிய வில்லை என்பது மனதிற்கு வருத்தத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது. ஒவ்வொரு பதிப்பக அரங்கினுள் நுழையும் போதும், அந்தப் பதிப்பகம், எந்த எந்த ஆசிரியர்களின் நூற்களை பெரும்பான்மையாக வெளியிடும்.என்பதையும், எந்த வகையான நூற்களை வெளியிடுவார்கள் என்பதையும் அவன் காது கொடுத்து கேட்க்காவிட்டாலும், என் நினைவாற்றலை புதிப்பித்துக் கொள்வதற்காக சொல்லிக் கொண்டே வந்தேன்.

"நீ ஏதோ ஒரு புத்தகம் கேட்டியே. அதை எந்த பதிப்பகம் வெளியிடும்"

"வம்சி புக்ஸ்"

"அது நம்ம வீட்டு பக்கத்திலேயே இருக்கே.அதை ஏன் இங்க வந்து வாங்கணும்"

"அங்கே இல்லை. அதான்".

அதற்குள் அனந்த விகடன் கொடுத்திருந்த மேப் பார்த்து வம்சி அரங்கைக் கண்டுபிடித்து, "அது எதிர்ப்பக்கத்தில் இருக்கிறது. வா போகலாம்" என்று வேகமாக நடக்க ஆரம்பித்தான்.

நமக்கெல்லாம், புத்தகக் கண்காட்சி என்பது ஒரு சொர்க்கம். ஒரு முறை வாடகை காரை எடுத்துக் கொண்டு போய், ஒரு நாளில் முழுக்க சுற்றிப் பார்க்க முடியாமல், தங்கினால் கார் வாடகை அதிகமாகுமே என்று குறை மனத்துடன் ஊர் திரும்பினேன். அடுத்த வருடத்தில் இருந்து பேருந்து பயணம் தான். இப்போது இருக்கும் பிள்ளைகளுக்கு, நாள் முழுக்க பாட புத்தகம் என்னும் பேப்பர்களையே பார்த்துக் கொண்டிருப்பதாலோ என்னவோ, மற்ற புத்தகங்களும் வெறும் பேப்பர்களாகவே தெரிகின்றன.

வம்சி புத்தக அரங்கினில் வெளியே நின்றுப் பார்த்தேன். கவர்னரின் ஹெலிகாப்டர் பெயர் தாங்கிய புத்தகம் காணோம். இன்னும் வெளியாகவில்லையா? அல்லது விற்று தீர்ந்து விட்டதா? என்ற மனக்குழப்பத்துடன் உள்ளே சென்று பார்வையிட்டேன். என் பையனும் பார்த்துக் கொண்டே வந்தான். அதற்குள் அரங்கத்தில் இருந்த ஒருவர்(ன்) வந்து, 

"சார், என்ன புத்தகம் வேண்டும்?" 

"கவர்னரின் ஹெலிகாப்டர், எஸ்.கே.பி. கருணா எழுதியது"

"இருக்கு சார்" - அவனருகிலிருந்த அடுக்கில் பார்த்து விட்டு, சற்றுத் தள்ளியிருந்த அடுக்கிலிருந்து எடுத்துக் கொடுத்தான். 

அதன் அட்டை படத்தை பார்த்த பின் தான் இதை நாம் முன்பே பார்த்தோமே என்று, நான் கடைசியாக பார்த்துக் கொண்டிருந்த அலமாரியிலேயே, என் கண் எதிரிலேயே அது இருந்ததைப் பார்த்தேன். 

என் மகனிடம், " வயசாகிப் போயிடுச்சி போலிருக்கு. பக்கத்திலேயே இருக்கிறது, கண்ணுக்கு தெரியல" என்றேன்.

அவன் சிரித்துக் கொண்டே, "ஸ்டாலில் இருந்தவர் முதலில் பார்த்தாரே ஒரு அடுக்கு. அதில் இல்லை என்று தானே தள்ளி இருந்த அடுக்கிலிருந்து எடுத்துக் கொடுத்தார். நன்றாக பாருங்கள். அவர் முதலில் பார்த்த அடுக்கிலேயே அந்த புத்தகம் இருக்கிறது. அதுவே அவர் கண்ணுக்கு தெரியவில்லை. அவருக்கு என் வயது தான் ஆகிறது. உங்கள் பார்வையில் குறைப்பாடு இல்லை. ரேப்பர் டிசைன் அது மாதிரி.மங்கலாக இருக்கிறது. இருட்டில் வைத்து விட்டால் கண்டுப்பிடிப்பது கஷ்டம்." என்று தேற்றினான்.

பல நூறு புத்தகங்கள் இருக்கும் ஒரு அடுக்கில், நம் புத்தகத்தின் பக்கம் ஒரு வாசகனின் கண்ணை திரும்ப செய்வது அதி முக்கியம். வளர்ந்த, பிரபலமான எழுத்தாளர்களுக்கு கூட ஆங்கில புத்தகங்களில் ஆசிரியர்களில் பெயரை மிகப் பெரியதாக போடுகிறார்கள். அதுவும் முதல் புத்தகம் வெளியிடும்போது அந்த புத்தகத்தின் அட்டை கொஞ்சம் கண்ணை ஈர்க்கும்படி கவர்ச்சியாக (அதற்காக நான் நடிகைகளை போட சொல்லவில்லை), அதிக வண்ணமயமாக இருக்க வேண்டும். 

ஒரு புத்தகத்தின் மேல் இருக்கும் அட்டைதான் அது எந்த வயதினருக்கான, எந்த மனநிலைக்கான புத்தகம் என்பதை காட்டுகிறது. அதிக கிராபிக்ஸ் உடன் கலர் கலராய் இருக்கும் புத்தக அட்டையை பார்த்த உடன் நம் மனது ஒரு குழைந்தைக்கான் புத்தகம் என்ற நினைவைத் தான் கொடுக்கும். அதுப் போல நவீன ஓவியங்கள், பழுப்பு வெள்ளை ஓவியங்கள், ஒரு பின் நவீனத்துவ, கம்யுனிச, தலித் இலக்கிய வகையை சார்ந்தது என்ற உணர்வைக் கொடுக்கும். ஒருவரின் புகைப்படம் மட்டுமே நிறைந்திருந்தால், அவரின் வாழ்க்கை வரலாறு போல என்றே எண்ணத் தோன்றும்.

ஒரு ஆசிரியரின் முதல் புத்தகத்தின் அட்டை, ஆசிரியரின் பெயர், புத்தகத்தின் பெயர் இவை எல்லாவற்றையும் விட அந்த அட்டைப படமே கவர்ந்து இழுப்பதாக இருக்க வேண்டும். இதில் உள்ள எல்லாக் கதைகளும் (கட்டுரைகளும்) முன்பே இணையத்தில் வாசித்தது தான். ஆனாலும், புத்தகமாக படிப்பது வேறொரு சுகானுபவமாக இருப்பது உண்மை தான். அதுவும் கருணா எழுத்து நடையில் சுவாரசியம் குன்றாமல் ஒரு கதையை எடுத்துக்கொண்டு செல்வதில் மிகவும் தேறி விட்டார். இந்த புத்தகம் இணையத்தை தாண்டி, வெளியில் உள்ள, இது வரை கருணாவின் எழுத்துக்களை அறியாத, வாசகர்களுக்காக வெளியிடப்படுவது. விளம்பரங்களோ, வியாபார தந்திரங்களோ எதுவுமே இல்லாமல், மிகவும் அமைதியாக, (இணையத்தில் இருப்பவர்களுக்கு மட்டும் இந்த புத்தகத்தை இளையராஜா வெளியிட்டது தெரியும்) வெளியிடப்பட்ட இந்த புத்தகத்தை விளம்பரப்படுத்த இருக்கும் ஒரே வழி புத்தக அட்டை தான். 

நாங்கள் புத்தகக் கண்காட்சி முழுக்க சுற்றியும், வம்சி அரங்கைத் தவிர வேறெங்கும் இந்த புத்தகம் கண்ணில் படவில்லை. நிறைய அரங்குகளில் இந்த புத்தகத்தை வைத்திருக்கலாம். ஒரு சிறிய புத்தக அறிமுக விழாவை கண்காட்சிக்குள் செய்திருக்கலாம். அது புத்தகத்தைப் பற்றி மற்றவர்களுக்கு தெரிய வைத்திருக்கும். குறைந்த பட்சம், புத்தகத்தைப் பற்றிய ஒரு சிறுக் குறிப்பாவது அங்கங்கே தொங்க விட்டிருக்கலாம்.

சரி. புத்தக விமரிசனம் எங்கே என்றுக் கேட்கிறீர்களா? கொஞ்சம் காத்திருங்கள். 





Saturday, January 17, 2015

மாதொருபாகன் - என் பார்வையில்.

பெருமாள் முருகனின் (இப்போது வெறும் பெ.முருகன், ஆசிரியர்) மாதொருபாகம் நாவல் பற்றி எல்லோரும் எழுதி விட்டார்கள். ஒரு பக்கம் எரிப்பும், ஒரு பக்கம் வாழ்த்தும் எழுந்து அடங்கி விட்டது. இப்போது தான் அந்த நாவல் படிப்பதற்கு கிடைத்தது. படித்த பின் என் மனதில் தோன்றியவை இவை.

முன்னுரையிலேயே திருச்செங்கோடு தொடர்பான அவர் தேடலில் பல விஷயங்களை அவர் கண்டறிந்ததாக சொல்கிறார். 'சாமி கொடுத்த பிள்ளை' மற்றும் 'சாமி கொழந்த' என்று குறிப்பிட்டு சொல்லப்படுபவர்கள் எல்லாம் சாமியிடம் வேண்டி பிறந்தவர்கள் என்று நம்பிக்கை.ஆனால் அதன் உண்மையை எதேச்சையாக கண்டறிந்ததாக சொல்கிறார். அவர் கண்டறிந்தது என்னவென்றால் பெண்கள் திருச்செங்கோடு தேர் திருவிழா இரவு இருண்ட பின், இருட்டில் ஒரு கூட்டுக் கலவி (குரூப் செக்ஸ்) வைத்துக் கொள்வார்களாம். இருட்டில் யாருடைய முகமும் தெரியாது என்பதால் பிற்காலத்தில் எந்த பிரச்சினையும் வராதாம். அப்போது வரும் ஆண்களை, பெண்கள் கடவுளே வந்திருப்பதாக நினைத்துக் கொள்வார்களாம். அப்படி பிறந்த குழந்தைகள் தான் சாமி கொடுத்த பிள்ளைகளாம்.

ரத்தன் டாட்டா அறக்கட்டளையின் 'கலைகளுக்கான இந்திய மையம்', இதற்க்கு பண உதவி வழங்கியிருக்கிறது. இந்த உதவி வழங்குவதற்கான உடன்படிக்கையிலும் கலைகளை பற்றிய ஆராய்ச்சியும், அதற்கான் சான்றுகளும் அவசியம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. பெருமாள் முருகன் தன்னுடைய முன்னுரையில் வ.கீதா, ஆ.இரா.வேங்கடாசலபதி, க்ரியா.ராமகிருஷ்ணன் மற்றும் பூமணி ஆகியோர் ஆய்வு தொடர்பாக உதவியதாக சொல்லியிருக்கிறார். இந்த பிரச்சினை பூதாகரமாக உருவெடுத்தபோது ஆதாரம் எல்லாம் கிடையாது. எல்லாம் சொல் கேள்விதான். சொன்னவர்கள் பெயரை எல்லாம் அவர்கள் பாதுகாப்பு காரணம் கருதி சொல்ல முடியாது என்று சொல்லி இருக்கிறார். பின் எதற்கு முன்னுரையில் தான் மாபெரும் ஆராய்ச்சி செய்ததாகவும் ஆராய்ச்சி முடிவில் இதை கண்டுபிடித்ததாகவும் சொல்லி இருக்கிறார்? எல்லாம் பணம் தான் போல. ஆராய்ச்சி என்று சொன்னால் தானே அறக்கட்டளையின் பண உதவி கிட்டியிருக்கும்.

இதை ஒரு ஆராய்ச்சி முடிவு என்பதை காண்பிக்க வேண்டும் என்பதற்காக பாவம் ஒரு சில தவறுகள் செய்து விட்டார். எந்த ஊர், எந்த இடம், எப்போது, யார், எந்த சாதி என்பதெல்லாம் சொன்னால் தான் இது உண்மை என்பது போல் இருக்கும் என்று சொல்லியிருக்கிறார்.

கதையின் நாயகனை (காளி), அறிமுகப்படுத்தும்போதே, அவன் வெள்ளாளன் சாதியை சேர்ந்தவன் என்று சொல்லி விடுகிறார். அவனும் அவன் மனைவியும் (பொன்னாயி) திருமணமாகி பன்னிரண்டு வருடங்கள் குழந்தை இல்லாமல் தவிக்கிறார்கள். இந்த பன்னிரண்டு வருட தாம்பத்தியத்தை அவர் விவரிக்கும்போது அவர்கள் இருவரும் மிகவும் மனமொத்திய தம்பதியராய் காட்டுகிறார். காளிக்கு இரண்டாம் கல்யாணம் செய்து விடலாம் என்று அனைவரும் சொல்லும்போது, அவன் பொன்னா மேல் வைத்திருக்கும் காதலால், குழந்தையே இல்லாமல் போனாலும் பரவா இல்லை பொன்னாயியை விட்டு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய மாட்டேன் என்கிறான். பொன்னாயியும் அந்த பேச்சை எடுக்கும்போதெல்லாம் கோபப்படுகிறாள். 180 பக்கங்கள் வரை இது தான் இருக்கிறது. இரு கதாபாத்திரங்களையும் கற்பனை செய்து பார்க்கும்போது அவர்களுக்கிடையேயான காதல் அழகாகத் தான் இருக்கிறது.

அதன் பின் தான் பெருமாள் முருகன் மலை ஏறுகிறார். திருச்செங்கோட்டு தேர் திருவிழாவில் இரவு ஒரு கூட்டுக் கலவி நடக்கும் என்கிறார். இதைப் பற்றி ஒரு சில பக்கங்களின் முன்னே, திருமணத்திற்கு முன், காளி ஒரு திருவிழா இரவின் போது அவன் நண்பனுடன் சென்று, பயந்து போய் இரவு முழுக்க ஒரு மாட்டு வண்டியின் கீழ் ஒளிந்து கொண்டு அத்தனை விஷயத்தையும் பார்த்து விட்டு மட்டும் வருவதாகவும், அடுத்த ஆண்டு திருவிழாவில் அவனும் கலந்துக் கொள்வதாகவும் எழுதி இருக்கிறார்.

பன்னிரண்டு வருடங்களாக குழந்தை இல்லாததால், பொன்னாயியை அந்த தேர் திருவிழா இரவு, அழைத்துக் கொண்டு போய் விட்டு விட வேண்டும் என்று, காளியின் தாயாரும், பொன்னாயியின் தாயாரும் முடிவெடுக்கிறார்கள். இதனை தன மகனிடம் சேர்ந்து கள் அருந்தும்போது காளியிடம் அவன் அம்மா சொல்கிறார். அதற்க்கு அவன் அதிர்ச்சியில் எதுவுமே பேசவில்லை. அடுத்த நாள் அவன் பொன்னாயியிடம் இதைப் பற்றி கேட்கும்போது, எடுத்த எடுப்பிலேயே உனக்கு சம்மதம் என்றால் எனக்கும் சம்மதம் என்று பொன்னாயி சொல்கிறாள். இவ்வளவு நேரமும் பொன்னாயி என்ற பாத்திரத்தின் மேல் இருந்த பிடிப்பு நமக்கும், காளிக்கும் உடைகிறது.

பொன்னாயியை, திருவிழாப் பார்க்க போகலாம் என்று அழைத்துக் கொண்டு போய் தனியே விட்டு விட்டு வந்து விடுகிறார்கள். அவளும் முகம் தெரியாத ஒருவனுடன் சேர்ந்து போகிறாள். உறவு இருந்ததா இல்லையா என்பதை ஆசிரியர் விளக்கவில்லை. ஆனால் அவனுடன் போகும்போது இவன்தான் என் சாமி என்று நினைப்பதாக ஆசிரியர் கூறும்போதே நமக்கு அவளின் இணக்கம் புரிந்து விடுகிறது. காளியை அவன் மச்சான் வெளியே அழைத்துக் கொண்டு போய் சாராயம் ஊற்றி தூங்க வைத்து விடுகிறான். திடீரென்று நாடு இரவில் எழுந்திருக்கும் காளி, தன மனைவி தேடி அவன் மாமனார் வீட்டிற்கு போக, அது பூட்டப்பட்டிருப்பதும், மாட்டு வண்டி இல்லாமலிருப்பதும் பார்த்து புரிந்துக் கொண்டு அவளை திட்டியவாறே மேலும் சாராயத்தை குடித்து விட்டு சாய்கிறான்.

இந்தக் நாவல் உண்மையில் ஒரு சில விஷயங்களை தவிர்த்து விட்டு பார்த்தால் நன்றாகத் தான் உள்ளது. அந்த ஒரு சில.

1.  சாதி. சாதியை பற்றி சொல்லாவிட்டால் எப்படி அது பின் நவீனத்துவ நாவல் ஆக முடியும். கதை முழுக்க கவுண்டர்கள் தான்.
           “நீ அந்தக்காலத்து ஆளாட்டமே பேசறீடா. ஒரு பொம்பளை சாதிக்குள்ளே எத்தன பேருகிட்டப் போனாலும் தப்பில்ல. பொழங்கற சாதிக்காரனோட போனாக்கூடப் பொறுத்துக்குவாங்க. தீண்டாச் சாதியோட போனா அவ்வளவுதான். ஊர உட்டே ஏன் சாதிய உட்டே தள்ளி வெச்சிருவாங்க. இன்னைக்கு அப்பிடியா? சாதிக்குள்ளேயே ஒருத்தனோடதான் இருக்கோனுங்கறம். அப்புறம் எப்படி? வீதியில சுத்தறதுல பாதிக்குமேல திரியறது தீண்டாச்சாதி தண்டுவப் பசங்கதான், அப்புறம் என்னால பொன்னாளாத் தொடவே முடியாது. கொழந்த பொறந்தாலும் தொட்டுத் தூக்கமுடியாது போ.” 
இந்த வசனம் காளி சொல்வது போல் எழுதி இருக்கிறார். இதில் சாதியை விட பெண்கள் தான் பொங்க வேண்டும். அவர் எழுதுவதாக கூறப்படும் 1930 காலங்களில் சாதி ஒரு முக்கியமான விஷயமாக இருந்ததது. ஆனால் தன சாதி அல்லது தான் புழங்கும் சாதி ஆண்களிடம் பெண்கள் எத்தனை பேரிடமும் போனாலும் தவறு இல்லை என்பது போல் சொல்லி உள்ளது யாராயிருந்தாலும் சற்று கோபம் வரத்தான் செய்யும். இந்த வாக்கியத்தை ஒருவர் முகப்புத்தகத்தில் சுட்டிக் காட்டி, அந்த திருச்செங்கோடு கவுண்டர்கள் தீண்டாச் சாதி ஆண்களுடன் தங்கள் வீட்டுப் பெண்கள் கூடுவதாக சொல்லியிருப்பதைத் தான் பெரிய அவமானமாக எடுத்துக் கொண்டு உள்ளார்கள் என்று கண்டுபிடித்து சொல்லியிருக்கிறார். அப்படி என்றால் அவர்கள், அவர்கள் வீட்டுப் பெண்கள் மற்ற சாதி ஆண்களுடன் எத்தனை பேருடனும் போனால் இப்போதும் கவலைப் படுவதில்லை என்று அர்த்தமா. சாதியா? பெண்ணுரிமையா? என்று வந்தால் இவர்களும் இவர்கள் சாதியைத் தான் கொண்டாடுகிறார்கள். சாதி ஒழிப்பு என்பது, இப்போதெல்லாம் எதிர் சாதி ஒழிப்பு என்றே ஆகிவிட்டது.

2. மதம். - முன்னுரையிலேயே "மாதொருபாகன்" விட சிறந்த தலைப்பு இந்த கதைக்கு பொருத்தமாக இல்லை என்று கூறுகிறார். மாது + ஒரு + பாகன் என்பது அர்த்தநாரீஸ்வரரை குறிக்கும் பெயர். தனது இடது பாகத்தை தன மனைவிக்கு தந்து, பெண்ணும் ஆணும் சரி சமமே என்ற பெண்ணியத்தை அன்றே உரத்து சொன்ன கதை அது. இது இந்த கதைக்கு ஒரு வகையில் பொருத்தமே. காளி முன்பே தேர்த்திருவிழாவில் ஒரு அல்லது பல பெண்களுடன் இருந்திருக்கிறான். பெண்ணுக்கும் சரி பாதி உரிமை இருக்கிறது என்பதால் பொன்னாயியும் அதையே செய்கிறாள். அதனால் தான் இந்த தலைப்பு பொருத்தமாக இருக்கிறது என்று அவர் நினைத்திருக்கலாம். ஒரு சமுதாய கோட்பாட்டிற்கு புறம்பில்லாத காரியத்தை அவளும் செய்வதாக இருந்தால் இந்த தலைப்பு பொருத்தமே. ஆனால் இந்தக் கதைக் கருவிற்கு இந்த தலைப்பு சில மத நம்பிக்கை கொண்டோர்க்கு கோபம் ஏற்படுத்தலாம் தான்.

தமிழகத்தின் எல்லா ஊர்களிலும் தேர்த் திருவிழா என்று ஒன்று உண்டு. அந்த ஊரின் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் கிராமத்து மக்கள் அனைவரும் முன்னிரவே வந்துக் கூடுவார்கள். அந்த இரவு முழுக்க கூத்தும், பாட்டும் நடக்கும். இது ஒரு மத சம்பந்தப்பட்ட விஷயம். யாரோ ஒருவர் சொல்லியதை (ஒருவேளை அவர் அப்படி செய்திருக்கலாம்) வைத்து, திருவிழாவை கொச்சைப்படுத்த தேவை இல்லை.

3. பெண்ணுரிமை - இந்த நாவலை எதிர்க்க வேண்டியவர்கள், பெண்ணுரிமை பேசுபவர்கள் தான். திருமணத்திற்கு பின் ஆறு வருடங்களாக காளிக்கு இரண்டாம் திருமணம் செய்வது பற்றி பேசும்போதெல்லாம், அதை தீவிரமாக எதிர்த்தவன் காளி தான். அவனுக்கு பொன்னாயி செய்வது நம்பிக்கை துரோகம் தான். அவள், அவன் ஒப்புக்கொண்டால் மட்டுமே தான் அதை செய்வதாக சொல்கிறாள். ஆனால் அவன் ஒப்புக் கொள்ளாமலேயே, இவளே விரும்பி போகிறாள். இது அவள் செய்யும் நம்பிக்கை துரோகம் தானே. இந்தக் கதைப்படி பார்த்தால் பெண்கள் பாதுகாப்பான சந்தர்ப்பம் கிடைத்தால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அனுபவிக்க ஆசைப்படுவார்கள் என்பது போல் அல்லவா உள்ளது? அவர்களுக்கு இடையேயான காதலில், குழந்தை இன்மை காரணமாக அவன் படும் அவமானங்களை நினைத்து அவள் இப்படி செய்கிறாள் என்று சொன்னால், பொன்னாயியின் மதிப்பு இன்னும் கூடி இருக்கும். அதுவும் அவன் அன்று இரவு, தன் உறவுக்கார குழந்தையை தத்து எடுப்பதைப் பற்றி பேசுகிறான்.

இதில் எனக்கு புரியாத விஷயம் என்பது, பெண்கள் எல்லோருமே மலட்டுத் தன்மை இல்லாதவர்களா? ஆண்கள் மட்டுமே ஆண்மை இல்லாதவர்களா? ஒரு மலட்டுத் தன்மை உள்ள பெண், மற்ற ஆண்களுடன் இணைந்தால் குழந்தை உருவாகி விடுமா? அப்படி உருவாகினால், அது நிச்சயம் சாமி கொடுத்த பிள்ளை ஆகி விடுமே?

சரி இப்போது உள்ள பிரட்சினைகளுக்கு வருவோம். முதலில் இதை ஒரு குறிப்பட்ட சாதி அமைப்புகள் தான் எதிர்த்தன. பின் அவர்களுடன் மற்ற சாதிக்காரர்களும் சேர்ந்துக் கொண்டனர். போராட்டத்தின் போது உள்ளே வந்த BJP, RSS கும்பல்களால் எல்லாமே தலைகீழாகப் போய் விட்டது. BJP எதிர்ப்பு மட்டுமே நமது பத்திரிகைகளால் முன்னிறுத்தப்பட்டது. BJP எதிர்ப்பு என்றவுடன் கம்யுனிஸ்ட்கள் எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்தனர். திராவிடத்தினர் நிலைமை பரிதாபம். புத்தகத்தை எதிர்க்கவும் முடியாமல், ஆதரிக்கவும் முடியாமல், விழி பிதுங்கிக் கொண்டிருகிறார்கள்.

திரு. சிவகுமாரன் என்பவர் முகநூல் பின்னூட்டத்தில் எழுதி உள்ளதையும் கவனிக்க வேண்டி உள்ளது.

Siva Kumar on January 2, 2015 at 7:42 am
திருசெங்கோட்டை சேர்ந்தவன் என்ற முறையிலும், கன்ன குலத்தை சார்ந்தவன் என்ற முறையிலும், எங்கள் பகுதியில் என்ன நடந்தது என்பதை விளக்க விரும்புகிறேன். ( நீங்கள் திறந்த மனதுடம் கேட்பீர்கள் என்ற நம்பிக்கையில்)
* மோரூர் கன்ன குல கோயில் நிர்வாகத்தினரிடம் இந்த புத்தகத்தை பற்றிய புகார் அவர்கள் குல மக்கள் ஒருவரின் மூலம் வந்துள்ளது. அதன் பிறகுதான் இது சம்பந்தமாக தங்கள் குல மக்களின் கூட்டத்தை கூட்டி, முறையான புகார் கொடுக்கலாம் என்று முடிவெடுத்தனர். திருச்செங்கோட்டு பகுதியை சேர்ந்த மற்ற சமூகத்தினர்களும் இதைப்பற்றி கேள்விப்பட்டு கோபமடைந்து, தஙக்ள் எதிர்ப்பை காட்ட விரும்பினர். இதன்மூலம் அனைத்து சமூக போராட்டக் குழு உருவாக்கப்பட்டது. இதில் ஆர்.எஸ்.எஸ் , ஹிந்து முன்னனி, பா.ஜ.க வோ முதலில் தலையிடவில்லை. போராட்டத்தின் போது திருச்செங்கோட்டு பக்தர்கள் அமைப்பு சார்பாக அவர்களும் கலந்து கொண்டனர். ஆனால் அடுத்த நாள் ஊடகத்தில் இது ஹிந்துத்துவ அமைப்பின் எதிர்ப்பாக காட்டியது எல்லாருக்கும் ஆச்சர்யம்தான்.
* இங்கே பிரச்சினை புத்தகத்தை எரிப்பது பற்றி அல்ல. கருத்து சுதந்திரம் பற்றியதும் அல்ல. பெருமாள் முருகன் எழுதிய நாவலில், திருமணமாகி குழந்தையில்லாத பெண்கள் அனைவரும், திருச்செங்கோட்டு கோயில் விழாவில், தனக்கு பிடித்த ஆணோடு கூடி குழந்தை பேறு பெற்றுக்கொள்வதாக சித்தரித்து, அதை நியாயப்படுத்தியும் வருகிறார். மேலும், இப்படி பிறந்த குழதையைத்தான் சாமி கொடுத்த குழந்தைபோன்ற பேச்சு வழக்குகள் குறிப்பதாகவும் எழுதியுள்ளார். இதைப் படித்த எங்கள் பகுதி பெண்கள் கொதிப்படைந்துள்ளனர். இங்கே விரதமிருந்து, கோயில் கோயிலாக சுற்றி, குழந்தை பெற்ற அத்தனை பெண்களையும் கேள்விக்குறியாக்கியிருக்கிறது. தங்கள் பகுதி பெண்களை இவ்வலவு கீழ்தரமாக சித்தரிக்கும் ஒரு நாவலை எரிப்பது அவர்களது எதிர்ப்பின் / கோபத்தின் அடையாளமே. இதை பெரிது படுத்துவது முக்கிய பிரச்சினையை திசை திருப்பும் ஒரு தந்திரமாகவே படுகிரது. தங்கள் குலப்பெண்களை கீழ்தரமாக சித்தரிக்கப்பட்டதை பார்த்துக்கொண்டு கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது, சிலர் உணர்சிவசப்படத்தான் செய்வார்கள்.. இதை உளவியல் ரீதியாக, அவர்கள் நிலையில் இருந்து சிந்திக்க வேண்டும்.
* திருசெங்கோட்டைப் பற்றிய ஏராளமான இலக்கியங்கள், குறிப்புரைகள், திருசெங்கோட்டைப் பற்றி விளாவாரியாக எழுதப்பட்ட வெள்ளையர் ஆவணங்கள், ஏன், (பெருமாள் முருகன் தொகுத்த) நாவலில் குறிப்பிடப்பட்ட காலகட்டத்தில் வாழ்ந்த திரு.முத்துசாமி கோனார் அவர்களின் கொங்குநாடு புத்தகத்தில் திருசெங்கோட்டை பற்றி விலாவாரியாக கூறப்பட்டுள்ளது, அதிலும் இல்லை. இந்த கோயில் மண்டப கட்டளைதாரர்கள் (பல்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள்), முன்னாள் இந்நாள் நிர்வாகிகள் எவருமே இதற்கான எந்த ஒரு முகாந்திரமும் இல்லை என்று கூறியுள்ளனர். நிலை இப்படி இருக்க பெருமாள் முருகனின் ஆதாரமற்ற கூற்றை நீங்கள் ஆதரிக்கிரீர்களா?
*நாவல் நடந்த காலகட்டமாக சொல்லியிருப்பது தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் தீயாக பரவிய காலம். இப்படியொரு சம்பவம் (மனதளவில் ஏற்றுக்கொள்ளப் பட்டு) நடந்திருக்குமெனில் திராவிட இயக்கத்தவர்கள் கூட இதை விட்டு வைத்திருப்பார்களா? இதைப்பற்றி இதுவரை வந்த எந்தவொரு சமூக வரலாற்று ஆய்வாளர்களும் குறிப்பிடாதது ஏன்?
* மாதொருபாகன் நூலை மட்டுமல்லாது பெருமாள் முருகனின் அனைத்து படைப்புக்களையும் வாசித்துள்ளேன். வாசித்தவர்களுக்கு அவரது சித்தாந்த-எண்ண ஓட்டம் பற்றி உணர முடியும். மாதொருபாகன் நூலை வாசித்தபோது எனக்கு முதலில் தோன்றியது நீங்கள் எழுதிய ஆய்வுலகின் அன்னியகரங்கள் கட்டுரைதான். இந்த புத்தகத்தை எழுதியதன் பின்னணி குறித்து பெருமாள் முருகனே அவரது முகவுரையில் தெரிவித்துள்ளார். டாடா மற்றும் ரோஜா முத்தையா நூலகம் போன்ற அமைப்புகள் உள்ளன. போர்டு பவுண்டேசனின் மறைமுக செயல்பாடுகளின் வெளிப்பாடு இது.
புனைவின் எல்லையில் இருந்து பார்க்கவேண்டிய இலக்கியப் படைப்பு என்று கூறியிருந்தீர்கள். இது வெறும் புனைவு என்றால் யாரும் வருந்தமாட்டார்கள். நாவலின் முன்னுரையில் இவர் களத்தில் கண்டுபிடித்த விஷயத்தை கருவாக கொண்டு எழுதிய புனைவு என்று உண்மைச்சாயம் பூச முயல்கிறார். ஒரு நாவலில் கற்பனையாக எழுதியிருந்தால் இங்கு எந்த பிரச்சினையும் இல்லை. நிஜ அடையாளத்தை கொண்டு எழுதுவது, அந்த வட்டார மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் விஷயமாகத்தான் பார்க்க வேண்டும். கருத்துக்கு சுதந்திரம் இருப்பது போல எல்லைகளும் உள்ளது."

அதை விட அதே luckylookonline பக்கத்தில் ஒரு பெண் இட்டிருந்த இந்த பின்னூட்டம், என்னை மிகவும் பாதித்தது.
http://www.luckylookonline.com/2014/12/blog-post_29.html



இந்த நாவலை படித்தேன், ஒரு சில பக்கங்களை படித்தவுடன் மிகவும் அபத்தமாக தோன்றியது, நானும் திருச்செங்கோட்டில் பிறந்தவள் என்பதால் அல்ல ஒரு பெண் என்பதால் அதுவும் (being a late child of my parents), என் அம்மா சொல்லி கேட்டிருக்கிறேன் குழந்தை பிறக்காதவர்களை இந்த சமூகம் எவ்வளவு மோசமக நடத்தும் என்று. ஒரு மாசம் முன்னாடி தான் எனக்கு கல்யாணம் முடிவு செய்தார்கள், இந்த எதிர்ப்பு பக்கத்தை பர்த்துவிட்டு அவர் கேட்டார் நீ கூட Late child தானே என்று கேட்டார் (because he is from chennai and he have no idea about my native, just see how much impact its creating for the people who didnt have idea of that place, may be author just taken this place to tell somthing but its affecting the people who are living there), 

விளையாட்டாக தான் கேட்டார் என்றாலும் எவ்வளவு அபத்தாமான கருத்தை இந்த எழுத்தாளார் மனதில் பதிக்கிறார் அவருடைய பொண்ன இப்படி யாரவது கேட்டிருந்தால் அவருக்கு எப்படி இருந்திருக்கும். 
என் பாட்டி சொன்னாங்க அந்த ஊர் அப்படி பட்ட ஊர் என்றால் எப்படி என் மகளை கல்யாணம் கட்டி கொடுத்திருப்பேன் என்று (சிந்திக்கபட வேண்டிய ஒன்று தான் இவர் சொல்வது போல இப்படி ஒன்று வழக்கத்தில் இருந்திருந்தால் எப்படி பெண் கொடுத்திருப்பார்கள்).

எழுத்து சுதந்திரம் மதிக்கபடவேண்டிய ஒன்று தான் ஆனால் அது அடுத்தவர்களைக் காயப்படுத்தாதவரை. 
திரு பெருமாள் முருகன் அவர்களுக்கு ஒருவேளை குழந்தை இல்லாமலோ அல்லது ரொம்ப நாள் கழித்து குழந்தை பிறந்திருந்தால் இப்படி எழுதியிருக்க தோன்றியிருக்காது காரணம் இவர் மனைவியயும் இழிவு படுத்தபட்டிருப்பார் அல்லவா. 
இதுக்கு எதிர்ப்பு இப்ப வருவதர்க்கு என்ன காரணம் என்று தெரியவில்லை ரொம்ப முன்னாடியே எதிர்க்கபட்டிருக்க வேண்டிய புத்தகம். என்ன மாதிரி ஒவ்வொருவரையும் ரொம்ப கஷ்டபடுத்திய புத்தகம். 
என் ப்ளாக்ல கூட என்னால இத எழுத முடியல, சில வக்கிர மனங்கள் எப்படி இத யோசிக்கும் என்று தெரிந்ததால். பெயர கூட சொல்லாமால் இதை இங்கு பகிர்கிறேன். இந்த புத்தகத்துக்கு support பண்றவங்க எங்க மன நிலையை யோசித்து பாருங்க."
உண்மையில் யாராவது இவருக்கு பதில் சொல்லத் தயாரா? அந்த பையன் வேண்டாம் வேறொரு பையனைப் பார் என்றெல்லாம் அறிவுஜீவியாக யாரும் பதில் சொல்ல வேண்டாம்.

       ஆக ஒரு நல்ல நாவல், உண்மை சம்பவம் என்று நிரூபிக்க வேண்டி, சொதப்பி விட்டது.

இறுதியாக : காளியின் பாட்டி சொல்வது போல் ஒரு வசனம் உள்ளது.

"உங்கொம்மா ராத்திரி எல்லாம் ஓசிச்சி ஓசிச்சி இப்படி ஒன்ன அவளே உருவாக்கி இருப்பா. " 

இதையே தான் சார் நீங்களும் பண்ணியிருக்கீங்க.

பின் குறிப்பு : இந்த நாவல் இரண்டு வெவ்வேறு பெயர்களில் இரண்டு வெவ்வேறு முடிவுகளுடன் வரப் போகிறதாமே? சில விஷயங்களை மட்டும் நீக்கி விட்டுப் பார்த்தால், மிக நல்ல நாவல் இது.