Saturday, May 26, 2012

ஏன் இப்படி நடக்கிறது.

நான் சொல்லப் போகும் பல விஷயங்கள் உங்களுக்கு பிடிக்காமலும் போகலாம். உங்கள் அறிவுக்கும் மனதிற்கும் ஒத்து வராமல் போகலாம். நான் ஒவ்வொரு பிரச்சனையையும், எப்போதும் பாதிக்கப்பட்டவர் பார்வையிலிருந்து விலகி பாதிப்பை ஏற்படுத்தியவர் ஏன் அப்படி செய்தார் என்று பார்ப்பவன். அவ்வாறு நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். பல நேரங்களில் நம் கோபமும் வெறுப்பும் எவ்வளவு பைத்தியகாரத்தனம் என்று புரியும். எனக்கு கணினியை விட மனித மனதின் (human psychology) மேல் ஆர்வம அதிகம். Irrational thinking என்று நாம் சொல்லிக் கொள்ளும் பல விஷயங்கள் தான் பல அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு அச்சாரமாக இருந்திருக்கிறது.
எவனோ ஒருவன் ஒரு தவறு செய்தால் அதற்காக அவனை திட்டி தீர்க்கும் நாம், அதே தவறை நாமோ அல்லது நமக்கு மிகவும் வேண்டபட்டவரோ செய்யும் போது ஒரு உப்பு சப்பு இல்லாத காரணத்தை சொல்லி நம் தவறையே சரி என விவாதிப்போம். அடுத்தவர் செய்யும் போது தவறென பட்டது இப்போது எப்படி சரியானது. இதுவும் ஒரு irrational thinking தான். மாத்தி யோசி என்று நாம் அடிக்கடி சொல்வதை நாம் நம் சொந்த விஷயங்களுக்காக மட்டுமே செயல்படுத்துகிறோமே ஒழிய மற்றவர் பிரச்சனைகளுக்கு நாம் காலம் காலமாக பின்பற்றிவரும் கலாச்சார விதிகளை மட்டுமே பின்பற்றுகிறோம்.
இவ்வளவு பீடிகையை போடுவதற்கு காரணம், என் கடையின் முன் நடந்த ஒரு சிறு கலவரம். நேற்று மதியம் ஒரு மணி வாக்கில், என் கடை முன் ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து ஒரு 35 வயது ஆண் இறங்கி என் கடையின் பக்கத்தில் உள்ள வக்கீல் ஒருவரை பார்க்க போனார். சிறிது நேரத்தில் இளவட்டங்கள் என் கடையின் அருகில் கூட துவங்கினர். நம் மூலையில் வழக்கம் போல எச்சரிக்கை மணி அடித்தது. நாம் ஒன்றும் பெரிய தாதா இல்லை என்றாலும் நாம் வெளியே போய் நின்றால் ஏரியா அமைதி ஆகிவிடும். (நல்லா பார்த்துக்கோ நானும் ரவுடி நானும் ரவுடி). திடீரென ஒருவன் அந்த காருக்கு அருகில் சென்று ஏதோ பேசிக்கொண்டிருந்தான். எனக்கு எதிர் பக்கம் இருந்ததால் என்னால் யாரிடம் பேசுகிறான்  என பார்க்க முடியவில்லை. உடனே ஒரு ஆட்டோ வந்து காரின் பக்கத்தில் நின்றது. அதிலிருந்து ஒரு பெரியவர் இறங்கினார். இறங்கிய வேகத்தில் காரின் பக்கத்தில் இருந்து பெசிக்கொண்டிருந்தவனை சரமாரியாக வசை பாடிக்கொண்டே அவனை அடிக்க போனார். ஆனால் கடைசி வரை அடிக்கவில்லை. அவருக்கு யாரையும் அடித்து பழக்கமில்லை போலும். வக்கீலை பார்க்க போனவர் குடு குடு என்று ஓடி வந்தார். மூவருக்கும் வாக்குவாதம் ரோடிலேயே வலுக்கவே, நாங்கள் எங்கள் மூக்கை நுழைக்க வேண்டி வந்தது. காரினுள் எட்டி பார்த்தால் ஒரு பெண் தன் ஒன்றரை வயது மகனுடன் உட்கார்ந்திருந்தாள்.
மூவரையும் விசாரித்த பொழுது கிடைத்த தகவல்கள்.
அந்த பெண் அவரின் திருமணத்திற்கு முன்பே காரின் அருகில் நின்று தன்னுடன் பேசிக்கொண்டிருந்த பையனை காதலித்திருக்கிறாள். தன் தந்தையின் கட்டாயத்தின் பேரில், தன் அத்தை மகனை திருமணம் செய்திருக்கிறாள். அவர்கள் இருவரும் நன்றாக திருமண வாழ்க்கை வாழ்ந்து ஒரு குழந்தையும் பெற்ற பின் அந்த மாஜி காதலன் மூலம் புயல் அடித்திருக்கிறது. அவன் எப்படியோ அந்த பெண்ணின் செல் நம்பரை கண்டுபிடித்து, இன்னும் அவன் அவளை காதலிப்பதாகவும், அவளுக்காக உயிரை விடப் போவதாகவும், அப்போது கூட தன் கை மணிக்கட்டை அவளை நினைத்து அறுத்து கொண்டதாகவும் சொல்லியிருக்கிறான். உடனே இந்த பெண்ணிற்கு பழைய காதல் மீண்டும் அரும்பியிருக்கிறது. இருவரும் முன் போல் பழகி இருக்கிறார்கள். இது அந்த பெண்ணின் கணவனுக்கு தெரிந்து விட அவன் எவ்வளோவோ சொல்லி பார்த்திருக்கிறான். ஆனால் அந்த பெண் திருந்துவதாக இல்லை. எனவே மண முறிவு ஒப்பந்தத்தை எழுதுவதற்காக வக்கீலை பார்க்க வந்திருக்கிறான். அந்த கணவனோ தன் குழந்தை தன்னிடமே இருக்க வேண்டும் என்று அடம பிடிக்கிறான். அந்த பெண்ணோ குழந்தையை தானே வளர்பதாக கூறுகிறார். அவளின் காதலனும் அந்த குழந்தையை தான் நன்றாக வளர்பேன் என்று கூறுகிறான்.
அந்த கணவன் இந்த விஷயத்தை எப்படி கூனி குறுகி சொல்கிறான் என்று பார்க்கும் போது அவன் மேல் நிச்சயம் பரிதாப படாமல் இருக்க முடியவில்லை. தன் குடும்ப மானமும், தன் தாய் மாமனின் குடும்ப மானமும் போகிறதே என அவன் கஷ்டபடுவது தெரிந்தது. அந்த பெண்ணை தனியே அழைத்து அவள் தன் கணவனை விட்டு பிரிவதற்கு என்ன காரணம் என்று கேட்டதற்கு அவள் மறுபடியும் மறுபடியும் சொன்னது, “என் கணவரை பற்றி நான் எதுவும் குறை கூற முடியாது. அவர் என்னை நன்றாக தான் வைத்திருக்கிறார் ஆனால் என் பழைய காதலன் நான் இல்லை என்றால் செத்துவிடுவேன் என்று கூறுகிறான். அவன் காதல் எனக்கு பிடித்திருக்கிறது. அதனால் என்னை அவனுடனே சேர்த்து வையுங்கள்.
நாங்களும் அந்த பெண்ணை தனி தனியாக கேள்வி மேல் கேள்வியாக கேட்டோம். அவள் சொன்னதிலிருந்து, அவள் கணவன், மிகவும் மரியாதையாக தான் அவளை நட்துவதாக் தெரிந்தது. இவ்வளவு பிரச்சனைக்கு நடுவிலும் அவன் அவளை போம்மா வாம்மா என்று தான் சொன்னானே தவிர அவள் இவள் என்று கூட சொல்லவில்லை. மாதம் நாற்பதாயிரம் ருபாய் சம்பளம் வாங்குகிறான். நன்றாகத்தான் அவளை வைத்திருக்கிறான். பின் எதுதான் பிரச்சினை? அவளிடம் விசாரணை செய்ததில் பணத்திற்கோ, பாசத்திற்கோ, மரியாதைக்கோ, காமத்திற்கோ அவன் எந்த குறையும் வைக்கவில்லை. Psychologist இதற்கு ஆயிரம் காரணங்கள் சொல்லலாம். தன் கணவனோடு அவள் முழுமையாக வாழவில்லை. அவள் மனதிற்குள் இன்னும் பழைய காதலன் தான் இருக்கிறான்- என்று. ஆனால் இதையெல்லாம் நம் தினசரி வாழ்க்கையோடு ஒப்பிட்டு பார்த்தால தவறு என்று புரியும். எத்தனையோ பேர் முதல் காதலை நெஞ்சினில் சுமந்து குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்கிறார்கள். முதல் காதல் மறுபடியும் குறுக்கிட்டாலும் நாசுக்காய் நகர்ந்து போகிறவர்கள் பல்லாயிரம் பேர். பின் இது போல் நடப்பதற்கு காரணம் என்ன?
ஒரு பெண்ணிற்கு நாம் தரும் சுதந்திரம் தவறா? அல்லது திடீரென கிடைத்த சுதந்திரத்தினால் பெண்கள் தாங்கள் செய்வது எல்லாமே சரி என்ற தவறான கருத்துக்கு வந்து விட்டார்களா? ஆனால் இந்த பிரச்சனையை நம் சமூகம் எப்படி எதிர் கொள்கிறது? இந்த பிரச்சனைக்கு எங்கள் தெரு பஞ்சாயத்துக்கள் சொன்ன தீர்ப்பு, “கொஞ்ச நாள் அந்த பெண் அவளின் தந்தையுடன் இருக்கட்டும். இரண்டு மாதம் பொறுத்து பார்க்கலாம்.
பஞ்சாயத்து செய்தவர்களை கூப்பிட்டு கேட்டேன். “நீங்கள் யார் மேல் தவறு என்று நினைக்கிறீர்கள்?”. எல்லோருமே அவள் காதலனைத்தான் குற்றம் சொன்னார்கள். அந்த பெண் செய்தது தவறாக தெரியவில்லையா? என்று கேட்டால், “அவள் பெண் பாவம், அவள் என்ன செய்வாள்? இவன் திரும்பவும் அவளுக்கு போன் செய்யாமலிருந்தால் அவள் இது போல் நடந்துக் கொண்டிருக்க மாட்டாள். என்று அந்த பெண்ணிற்கு சாதகமாகவே பேசினார்கள். அந்த பையனின் வாழ்க்கை என்னாவது? என்றதற்கு, “அவனுக்கென்ன அவன் ஆம்பிள்ளை இவள் திரும்பவும் வந்தால் சேர்ந்து வாழப்போகிறான். இல்லை என்றால் வேறொரு பெண்ணை திரும்பவும் திருமணம் செய்து கொண்டு வாழப்போகிறான். என்றார்கள். அப்படி என்றால் இத்தனை நாளாய் அவன் அவளுக்காக வாழ்ந்தது?, “அதெல்லாம் கெட்ட கனவாக நினைத்து மறந்து விட வேண்டியது தான்.
இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், “இன்னும் இந்த சமூகம் ஒரு பெண்ணை பழங்காலத்து அடிமை பெண்ணாகவோ அல்லது weaker sex ஆகவோ தான் பார்க்கிறது. ஆனால் பெண்கள் இதை மிக சரியாக பயன்படுத்தி அவர்களுக்கு சாதகமாக அவர்கள் நினைத்தபடி வாழ்க்கையை வாழ்கிறார்கள். நான் அனைத்து பெண்களையும் இந்த குற்ற சாற்றிற்கு உட்படுத்த விரும்பவில்லை. தவறு செய்யும் கணவனை திருத்தி அவனை பெரிய ஆளாய் ஆக்கிய பல பெண்களை எனக்கு தெரியும். தான் காதலித்த குற்றத்திற்காக முழு குடும்ப பொறுப்பையும் சுமந்து கொண்டு குடும்ப தலைவன் வேலையும் சேர்த்து செய்து மாடாய் உழைக்கும் பல வெளியே தெரியாத பெண்கள் இன்றும் நம்மிடையே இருக்கிறார்கள்.
அந்த கணவனின் மன நிலையை யாராவது உணர்ந்திருக்கிறார்களா? ஒரு பெண்ணின் மனம் இன்னொரு பெண்ணிற்கு தான் தெரியும் என்று சொல்லும் நாம் ஏன் ஒரு ஆணின மனத்தை இன்னொரு ஆணுக்கு தெரிவதில்லை. அவன் தன் மனைவி என்பதற்காக அவளை சந்தோஷமாக வைத்திருப்பதற்காக எவ்வளவு உழைக்கிறான் என்பதும் அவனுக்குள்ளும் ஒரு பாசம் உண்டு என்பதும் ஏன் எந்த மற்ற ஆணுக்கும் அந்த சட்டத்தை ஏற்றும் ஆண்களுக்கும் புரிவதில்லை. ஓஷோ அழகாக சொல்லி இருக்கிறார். “ஒவ்வொரு ஆணுக்குள்ளும் ஒரு பெண் உண்டு. ஒவ்வொரு பெண்ணுக்குக்குள்ளும் ஒரு ஆண் உண்டு. பெண்ணுக்குள் இருக்கும் ஆண் வெளியே வந்தால் எந்த ஒரு ஆணாலும் அதை வெல்ல முடியாது. ஆணுக்குள் இருக்கும் பெண் வெளியே வந்தால் எந்த ஒரு பெண்ணாலும் அதை வெல்ல முடியாது. (அவர் உள்ளே இருக்கும் ஆண் என்று சொல்லுவது வீரம் மற்றும் காமம், உள்ளே இருக்கும் பெண் என்று சொல்லுவது அன்பு, பாசம்). இப்போது உள்ள பிரச்சனை இரண்டுமே வெளியே வந்திருப்பதுதானோ?
ஆனால் என்னை பொருத்தவரை த்னசரி நாளேடுகளில் பார்க்கும் போதெல்லாம் மனைவிக்கு துரோகம் செய்யும் கணவர்களை விட கணவனுக்கு துரோகம் செய்யும் மனைவிகள் அதிகமாகி கொண்டே வருகிறார்கள்.
எல்லா பிரச்சனைகளும் முடிந்த பின் டீ கடையில் உட்கார்ந்து இருந்த போது ஒரு இளைஞன் என்னிடம் வந்து ஆக்ரோஷமாக சொன்னான். “எழுதி வச்சிக்கோ அண்ணே. இந்த காலத்து பசங்க ரொம்ப கற்புடையவங்க. ஆனா பொண்ணுங்க தான் ரொம்ப கெட்டு போய்க்கினு இருக்காங்க. அவன் சொன்னதின் உண்மை என் மனதை பிசைந்தது.
பாரதியை தேடிக்கொண்டிருக்கிறேன் “கற்பு நிலை தனை பொதுவில் வைப்போம் என்று எதை நினைத்து எழுதினாய். இரண்டு பேருமே கற்பில்லாமல் வாழ்வதற்கா?
பின் குறிப்பு : மேற்கண்ட சம்பவம் நடந்து சில நாட்களுக்கு பின் ஒரு சாமியாரை சந்தித்தேன். அவரின் சொந்த கதை, ஒரு கள்ள காதல் ஒரு குடும்பத்தை எப்படி நாசமாக்குகிறது என்பதற்கு ஒரு நல்ல உதாரணம். அதை இன்னொரு நாள் எழுதுகிறேன்.