Sunday, March 25, 2018

உலகம் எங்கேடா போகுது.

நேற்று இரவு ஒரு தம்பதியினர் கடைக்கு ஒரு லேப்டாப்புடன் வந்தனர். என்ன விஷயம் என்றுக் கேட்டதற்கு பதில் சொல்ல மிகவும் தயங்கினர். கடையில் இருந்த அனைவரும் வெளியேறிய பின், இந்த லேப்டாப்பில் உள்ள Facebook, Messenger, Whatsapp போன்ற Social Media பைல்களை ரெகவர் செய்ய வேண்டும் என்றார்கள்.

என்ன விஷயம், ஏன் தயக்கம். எதுவாக இருந்தாலும், தைரியமாக சொல்லுங்கள். அப்போது தான் உங்களுக்கு எது தேவையோ அதை தெளிவாக எடுத்துத் தர முடியும் என்றேன்.

"ஒண்ணுமில்லை சார். என் பையன், வீட்டை விட்டு ஓடிப் போயிட்டான். அவன் எங்கே போயிருக்கிறான்னு தெரியல. அதை கண்டுபிடிக்கத்தான் வந்தோம்"

சரி கொடுங்கள் என்று வாங்கிப் பார்த்தால், பையன் கம்ப்யூட்டரில் புலி போல. அழகாக முழு ஹார்ட் ட்ரைவையும் format பண்ணி இருக்கிறான். எங்கே ரெகவரி பண்ணிவிடுவாங்களோ என்று அதில் மறுபடியும் விண்டோஸ் இன்ஸ்டால் பண்ணி இருக்கான். மேலும் பல video பைல்களை காப்பி செய்து அழித்து, திரும்பவும் ரெகவர் பண்ண முடியாதபடி செய்துள்ளான்.

எப்பவுமே குற்றம் புரிபவர்கள், ஏதாவது சிறு தவறு செய்திருப்பார்கள் என்ற கிரிமினல் கொள்கையின் படி, இதிலும் சிறு தவறு செய்திருந்தான். (அது என்ன? என்று சொல்லப்போவதில்லை. அப்புறம் நீங்களும் உஷார் ஆகிட்டீங்கன்னா?). ரெகவர் பண்ணால், ரொம்ப கஷ்டப்பட்டு கண்டுப்பிடிக்க தேவைப்படவில்லை. அவனின், ப்ரௌசெர் டெம்ப்ரவரி பைல்களை நோண்டும்போதே தெரிந்து விட்டது. பையன் ola cab புக் செய்திருக்கிறான். கோவாவில் ஒரு ஓட்டலை இரண்டு பெரியவர்களுக்கு என்று புக் செய்திருக்கிறான்.

இரண்டு பேருக்கு என்பது கொஞ்சம் இடித்ததால், அவன் கூட பொண்ணையும் கூட்டிட்டு போயிருக்கானா? என்றக் கேட்டவுடன், "பேய் அறைந்தது போல முழித்து விட்டு "ஆமாம்" என்றார்கள். "அப்போ பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் தந்திருப்பார்களே" என்றதற்கு, அவர்கள் "இனி எங்களுக்கு பெண்ணே இல்லை. தலை முழுகி விட்டோம்"
 என்று சொல்லி போலீசுக்கு புகார் தர மறுத்து விட்டனர் என்றார். அந்தப் பெண்ணின் பெற்றோரை நினைத்து மனது வலித்தது. வெளியே மானத்துக்கு பயந்து, அப்படி சொல்லி இருந்தாலும், அந்த பெற்றோரின் வருங்கால வாழ்க்கை என்பது சவ வாழ்க்கை தான்.

தெரிந்த போலீஸ் நண்பருக்கு போன் செய்து, பெண் வீட்டில் வழக்கு எதுவும் பதிய விரும்பவில்லை என்று தெரிந்துக் கொண்டேன். அந்த போலீஸ் நண்பருக்கு தெரிந்தக் குடும்பம் தானாம். அவரே நேரில் போய் கேட்டாலும், புகார் கொடுக்க விரும்பில்லை என்று மறுத்து விட்டார்களாம்.

சரி என்று எடுத்த டேட்டாவை அவர்களுக்கு கொடுத்து விட்டு, சாதாரணமாய் கேட்டேன்.

"பையன் என்ன பண்றான்."

"+2 படிச்சிக்கினு இருக்கான் சார். பாருங்க சார். பரீட்சைக் கூட எழுதாம ஓடிட்டான்."

அடப்பாவிங்களா! நாடு எங்கே தான் சார் போகுது.

No comments:

Post a Comment