Friday, January 23, 2015

அச்சில் ஏற்ற முடியா வார்த்தைகள்.

நான் தமிழைப் படிக்க ஆரம்பித்தது என் ஏழு வயதில். அப்பொழுதெல்லாம் என் பெற்றோர் படிக்க உற்சாகப்படுத்துவார்கள். தீபாவளிக்கு ஒரு மத்தாப்புக் கூட வேண்டாம் என்று சொல்லி விட்டு அந்த காசில், பாரதியார் கவிதைகளும், திருக்குறள் மு.வ. உரைநடை புத்தகமும், அப்போதிருந்த 16 கால் மண்டபத்தில் இருந்த புத்தகக் கடையில் வாங்கித் தரச் சொன்னேன். வீட்டை விட்டு வெளியே செல்லாமல், அந்த தீபாவளி பாரதியுடனே கழிந்தது. அடுத்து ராமாயணம், மகாபாரதம் என்று காவியங்களை படிக்க ஆரம்பித்தேன். மகாபாரதத்தை வீட்டில் படிக்கக் கூடாது என்று பெரிய கோயிலுக்கு அனுப்புவார்கள். பெரிய கோயிலில் மூலஸ்தானம் வெளியே உள்ள விளக்கைக் கூட அப்பொழுதெல்லாம் ஏற்ற மாட்டார்கள். யாராவது எண்ணெய் அளித்தால் ஏற்றப்படும். சில நேரங்களில் காலை அபிஷேகம் முடித்து விட்டு அய்யர் எங்காவது சென்று விடுவார். நாம் தான் அண்ணாமலையாருக்கு காவல்.

கிட்டத்தட்ட எல்லா வார, மாத இதழ்களையும் படித்திருப்பேன். டேனிஷ் மிஷன் பள்ளி எதிரில் உள்ள பொது நூலகம் தான் சாயங்கால கோயில். ஆரம்பத்தில், அங்கிருந்த நூலகர், நாம் உள்ளே நுழையும் போதே, ஏதோ பள்ளித் தலைமை ஆசிரியர் போல, உர்ரென்று முறைப்பார். கண் கொத்தி பாம்பு போல, நம்மை கவனித்துக் கொண்டே இருப்பார். நாம் நிறைய புத்தகங்களைப் படிப்பதையும், எடுத்த புத்தகத்தை எடுத்த இடத்தில் ஒழுங்காக வைப்பதையும் பார்த்தோ என்னவோ, சிறிது காலம் கழித்து நம்மைக் கண்காணிப்பதை விட்டு விட்டார். சில மாதங்களுக்குப் பிறகு, பெரியவர்கள் படிக்கும் சில புத்தகங்களைக் கேட்டால், எடுத்து வந்து கொடுத்து, படித்துவிட்டு தன்னிடமே தர வேண்டும் என்று அடிக்குரலில் சொல்லிவிட்டு போவார். இப்படியாகத் தான் தமிழ் இலக்கியம் எனக்கு அறிமுகமானது.

பிளஸ் ஒன் படிக்கும்போது, நகராட்சி ஆண்கள் பள்ளியில் தான் முதன் முதலில், பாலியல் புத்தகங்கள் எனக்கு அறிமுகமாயின (சினி மித்ரா மற்றும் சரோஜாதேவி). அதில் உள்ள சில வார்த்தைகள், நாம் தெருவில் நடந்து போகும்போது கேட்டிருக்கிறோம் என்றாலும், நாம் அதை பேசுவதோ, மனதில் நினைப்பதோ இல்லை. அந்த வயதில் அதைப் படிக்கும்போது கிளர்ச்சியாக இருந்தாலும், அது யாருமறியா தனிமையில் முடிந்து விடுகிறது. வெளியே வரும்போது அந்த வார்த்தைகள் மனதில் இருந்து வெளியில் வருவதில்லை.

நான் Central Polytchinic, Adyarஇல் படித்துக் கொண்டிருந்தபோது, என்னுடன் ஆவடியில் இருந்து வரும் ஒருவன் படித்துக் கொண்டிருந்தான். நான் சில நாவல்களை என்னுடன் எடுத்துக் கொண்டு போவதைப் பார்த்து, "இதெல்லாமா படிக்கிறாய். வீட்டில் திட்ட மாட்டார்களா?" என்றான். "படிப்பதற்கு ஏண்டா வீட்டில் திட்டுவார்கள்", என்று நானும் ஆச்சரியமாக கேட்க அவன் சொன்னது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

"எங்கள் வீட்டில் இதெல்லாம் படிக்க விட மாட்டார்கள். குழந்தைகள் புத்தகம் தான். வார இதழ்கள் என்றால், தினமலர் சிறுவர் மலர் தான். அதைக் கூட என் அம்மா ஒரு முறைப் புரட்டிப் பார்த்து, ஏதாவது படம் அசிங்கமாக (?) இருந்தால் அதைக் கத்தரித்துவிட்டுத் தான் தருவார்கள்", என்றான். சந்தேகப்பட்டு அவனின் வீட்டிற்க்கே சென்று பார்த்து உண்மையென தெரிந்துக் கொண்டேன். வீட்டிலேயே சென்சார். அதுவும் ஒரு இருபது வயது பையனுக்கு. என்ற போது மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

எங்கள் வீட்டில், ஒரு சிறிய நூலகம் உண்டு. என் மகனோ, மகளோ அந்த பக்கமே போவதில்லை என்று எனக்கு மிகவும் வருத்தம் உண்டு. அவர்களுக்கு படிக்கும் ஆசையை உண்டு பண்ண நாங்களும் தலைகீழாக நின்று பார்க்கிறோம். இப்போது தான் படிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். நான் நிறைய புத்தகங்களை வாங்கிக் கொண்டு வந்து நூலகத்தில் சேர்க்கும்போது, என் மனைவிக் கேட்டாள்,

"இந்தப் புத்தகங்களை எல்லாம் குழந்தைகள் படிக்கலாமா? எதுக்கும் நீங்கள் ஒரு முறை படித்து விட்டு தவறான வார்த்தைகள் எதுவும் இல்லை என்றால் இங்கே வையுங்கள். இல்லை என்றால், உங்கள் கடையிலேயே வைத்துக் கொள்ளுங்கள். இங்கே பசங்க கண்ணில் படும்படி வேண்டாம்".

எனக்கு ஆவடி நண்பனின் நினைவு வந்தது. "ஏன் படிக்கக் கூடாத புத்தகம் என்று ஏதாவது இருக்குதா, என்ன?".

"ஏன் இல்லை. இப்போது வரும் நாவல்களில் பெரும்பான்மையானவை, கீழ்த்தர வார்த்தைகளை சர்வ சாதாரணமாக சொல்கின்றன(!). அதுவும் நீங்கள் கொண்டாடும் முற்போக்கு நாவல்கள் எல்லாம் ஒரு பொது இடத்தில் சத்தம் போட்டு படிக்க முடியுமா? பக்கத்துக்கு நாலு வார்த்தையாவது அசிங்கமாகத்தான் வருகிறது."

"இந்த வார்த்தைகள் எல்லாம் பசங்க கேட்டே இருக்க மாட்டாங்களா என்ன?"

"நிச்சயம் கேட்டு இருப்பார்கள். ஏன் நீங்களும் குழந்தையாக இருக்கும்போது கேட்டுத்தான் இருப்பீர்கள். அதற்காக அதை வீட்டில் குழந்தைகள் எதிரில் பேசுவீர்களா? ஒரு வார்த்தையை கேட்பதற்கும், படிப்பதற்கும் குழந்தைகளைப் பொறுத்தவரை வித்தியாசம் உண்டு. குழந்தைகளுக்கு வெளியில் இருப்பவர் பேசுவது மனதில் பதியாது. அதே வீட்டில் டீவீயில் வரும் வசனம் உடனே மனதில் பதியும். குழந்தையை பொறுத்தவரை அது கற்பதற்கான சூழல், வீடு மட்டுமே. வீட்டில் நீங்கள் பேசுவது தான் அது மனதில் பதியும். பள்ளிக்கூடமும் அப்படித்தான். புத்தகங்களும் அப்படித்தான். எங்கள் பள்ளியில் படிக்கும் ஒன்றாவது சிறுவன் கூட காதுக் கொடுத்து கேட்க முடியாதபடி பேசுகிறான். அதற்க்கு காரணம் வீடு. அந்தக் குழந்தைகள் வீட்டிலேயே அந்த வார்த்தைகளை கேட்பதால் தான் இப்படி பேசுகின்றன. நல்ல படியாக வளர்ந்த குழந்தைகள் கூட பள்ளியில் கூடப் படிக்கும் குழந்தைகளிடமிருந்து கற்றுக் கொள்கின்றன. பள்ளியும் குழந்தைக்கு ஒரு கற்பதற்கான சூழல் என்பதால் தான் இது".

நிச்சயமான வார்த்தைகள். இப்போது வரும் நாவல்களில் பெரும்பாலும் இந்த கொச்சை வார்த்தைகள் இல்லாமல் வருவதில்லை. இணையங்களில் இருக்கும் பெரும் எழுத்தாளர்கள் கூட மகாக்கேவலமாக கீழ்த்தர வார்த்தைகளை எழுதுகிறார்கள். கேட்டால் ஒருவன் கோபப்படும்போது இது போன்ற வார்த்தைகள் வருவது இயல்பு என்று ஒரு சப்பக்கட்டு வேற.

போறப்போக்கைப் பார்த்தால், இப்படிப்பட்ட வார்த்தைகளை வளரும் சமுதாயத்திற்கு அறிமுகப்படுத்தி, அதை பேச, எழுத, ஊக்கப்படுத்தி, இவர்கள் முற்போக்கு எழுத்தாளர்கள் என்ற பெயரில் வருங்கால சந்ததியை கீழ்த்தர மாக்களாக மாற்றுவதற்கு பதில், அவர்கள் படிக்கும் பழக்கம் இல்லாமலேயே இருக்கலாம் போலிருக்கு.

ஒரு எழுத்தாளர் கோபப்பட்டு சொன்னார். "இதனால் தாண்டா தமிழன் முன்னேறவே மாட்டேன் என்கிறான். மேலை நாடுகளில் பார். அங்கே அனைத்து வார்த்தைகளும் எல்லா தரப்பு கதைகளிலும் பரவி இருக்கும். இங்கே தான் ரொம்ப போர்த்தி இருக்கீங்க."

"இங்கே யாரும் இந்தியாவை அமெரிக்கா ஆக்க விரும்பவில்லை. நாங்கள் நாகரிக மனிதனாகவும், எங்கள் அடுத்த தலைமுறை நல்ல விஷயங்களை பற்றி மட்டுமே படித்து, பண்புள்ள மக்களாகவே இருந்து விட்டுப் போகட்டும். எந்த முன்னேற்றமும், முற்போக்கும் வேண்டாம். முதலில் ஒரு புத்தகம் பிரசுரிக்கும்போது, அது எந்த பிரிவு வயதினருக்கு என்று போடுங்கள். அதில் கொச்சை கீழ்த்தர வார்த்தைகள் இருக்கிறதா என்பதையும் தெரிவியுங்கள். அப்போது தான் இந்த புத்தகத்தை தனக்காக வாங்குவதா, பசங்களுக்காக வாங்குவதா என்பதை நாங்கள் முடிவெடுக்க முடியும். ஒவ்வொரு புத்தகத்திறக்கும் காசு கொடுத்து எங்களையே சென்சாரும் பண்ண வைக்காதீர்கள்".

ஒரு அடிமட்ட குடும்பத்தினர் படும் கஷ்டங்களை, எங்கோ பெருநகரத்தில், பதினாலாவது மாடியில், குளிரூட்டப்பட்ட தனி அறையில் படிக்கும் ஒரு குழந்தைக்கு, சிறு வயதிலேயே தெரிய வேண்டும். அதை உங்களின் சில வார்த்தைகளால் அவர்களுக்கு சென்றடையாமல் இருக்க வேண்டுமா? நல்ல சிந்தனைகள் அனைவரையும் சென்றடைய ஆவன செய்யுங்களேன், தோழர்களே.

அச்சில் ஏற்ற முடியா வார்த்தைகள் - இதை மீண்டும் கொண்டு வருவோம், வளரும் இளைய தலைமுறையினரின் வளமான வாழ்க்கைக்காக.

No comments:

Post a Comment