Sunday, November 4, 2012

தண்ணீ கொடுங்க

டெங்கு - இப்போது தமிழகத்தை தாக்கிக் கொண்டிருக்கும் வைரஸ் புயல். இதனை தடுப்பதற்கு எவ்வளவோ விளம்பரங்களை செய்யும் அரசாங்கம், ஏனோ வந்த பின் என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்லவே இல்லை. என் மகளுக்கு டெங்கு வந்த பின் நான் பல டாக்டர்களிடம் ஆலோசனை செய்த பின் இதற்கு ஒரே தீர்வு தண்ணீர் தான் என்று உணர்ந்துக் கொண்டேன். முதலில் டெங்குவை கண்டறிவது எப்படி என்றுப் பார்க்கலாம்.

ஜுரம வந்த இரண்டு நாட்களுக்கு மருத்துவ விதிப்படி எந்த மாதிரியான ஜுரம என்பதைக் கண்டுப்பிடிப்பது மிகவும் கடினம். எனவே முதல் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு பாராசிட்டமல் மாத்திரைகளையும், ஆண்டி-பியோடிக் மாத்திரைகளையும் மட்டுமே டாக்டர்கள் கொடுக்கிறார்கள். இதையும் தாண்டி டெங்கு அல்லது எந்த மாதிரியான வைரஸ் ஜுரம என்பது தெரியாத வரையில் யாரும் எதுவும் செய்ய முடியாது.

ஆனால் என் அனுபவத்தில், சாதாரண ஜுரம வந்தவர்களால் நன்றாக சாப்பிட முடிகிறது அல்லது நன்றாக தண்ணீர் குடிக்க முடிகிறது. ஆனால் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களால் தண்ணீர் குடிப்பதே மிகவும் சிரமமாக உள்ளது. நாமும் பாவம் குழந்தை ஜுரத்தால் எதுவும் சாப்பிட முடியவில்லை என்று விட்டுவிடுகிறோம். மீறி நாம் வற்புறுத்தி தண்ணீர் கொடுத்தாலும் வாந்தி தான் வருமே ஒழிய நீர் உள்ளே போவதில்லை.

டெங்குவின் இன்னொரு பெயர் எலும்பை முறிக்கும் காய்ச்சல். டெங்கு என்பதை உடனடியாக அறிய தலையில் முன்பக்கம் (கண்களின் பின்புறம்) கடுமையான வலி இருக்கும். ஜுரமும் அதிகரிக்கும் 104 டிகிரிக்கு மேல் ஜுரம இருந்தால் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும். மூட்டு வலியும் இருக்கும். 50 முதல் 80 சதவிகிதம் பேருக்கு தோலில் சிகப்பாக கடுகு அளவிற்கு புள்ளிகள் தோன்றும். தோலை அழுத்தினாலும் இந்த புள்ளிகள் மறையாது. சிலருக்கு மூக்கிலும், பல் ஈறுகளிலும் ரத்தம் கசியலாம். WBC Count மிகவும் குறைவாக இருக்கும். இதை எல்லாம் விட முக்கியமானது platlet counting.  சாதாரணமாக platlet counting 1,50,000 - 4,50,000 வரை இருக்கும். இந்த platlet counting ஒரு நாளைக்கு 30,000 வரை குறைந்தால் நிச்சயமாக ஏதோ  ஒரு தவறு நம் உடம்பினுள் நடக்கிறது என்று அர்த்தம். இந்த platletகள் தான் நம் ரத்தத்தை உறைய வைக்கின்றன. இவை குறைவதால் தான் பல் ஈறுகளிலும் மூக்கிலும் ரத்தம் உறையாமல் வெளியேறுகிறது. Platlet எண்ணிக்கை 1,00,000க்கு குறைந்தால் நோயாளிக்கு அடிபடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். டெங்கு எலும்பை பதம் பார்ப்பதால் எலும்பு மச்சையில் இருந்து உருவாகும் platlet குறைகிறது.

டெங்குவா என்று கண்டறிய வழிகள் (ஒரு வாரத்திற்குள்):
1.     ஜுரம 104 டிகிரிக்கு மேல்.
2.     தலையின் முன்பக்கம் கண்களுக்கு பின் வலி.
3.     கை, கால், மூட்டு வலி.
4.     பல் ஈறுகள், மூக்கினில் ரத்த கசிவு.
5.     Platlet count 1,00,000க்கும் குறைவு அல்லது தினமும் 30,000 குறைவது.
6.     வாந்தி.
7.     ஆகாரம் மற்றும் தண்ணீர் உட்கொள்ளாமை.

மேற்கண்ட அறிகுறிகள் இருந்தால் தயவு செய்து மருத்துவரை அணுகவும். 

டெங்கு கண்டறிவதற்கான டெஸ்ட்கள்.

CBC - WBC Count, Platelet Count, Haematocrit
S. Protien, S. AlbuminLiver Function TestsUrine - microscopic haematuriaDengue IgG & IgM


நான் பல மருத்துவரை கேட்ட வரை இதற்கு மருந்து தண்ணீர் தான். ஆனால் தண்ணீர் குடித்தால் வாந்தி வரும். தண்ணீரை ஒரு டீ ஸ்பூனில் எடுத்து உதட்டில் வையுங்கள். அந்த தண்ணீர் சிறிது சிறிதாக தொண்டையினுள் இறங்கட்டும். இதை மட்டும் நீங்கள் செய்யாவிட்டால் நிலைமை மிகவும் மோசமாகி விடும். ஒரு நாளைக்கு நான்கு லிட்டர் தண்ணீர் (அல்லது சாத்துகொடி சாறு ) கொடுக்க வேண்டியது கட்டாயம்.

ஒரு வாரத்திற்கு பின் டெங்கு படிப்படியாக குறைந்து வர வேண்டும். அவ்வாறு வரவில்லை என்றால் அதன் பின் ஒரு கடுமையான யுத்தத்தை அது உடம்பினுள் ஆரம்பிக்கும். இங்கு மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது ஜுரம. ஜுரம விட்டு விட்டால் டெங்கு போய் விட்டது என்று நாம் நினைத்துக் கொண்டு மருத்துவத்தை நிறுத்தி விடுகிறோம். ஆனால் ஜுரம குறைந்த பின் தான் டெங்கு தன் வேலையை துவங்குகிறது. ஜுரம போன பின் உங்கள் WBC count, Platlet count சாதாரண நிலைக்கு திரும்பி விட்டால் பயமில்லை. அவ்வாறு திரும்ப வில்லை என்றால் டெங்கு அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராகிறது என்று அர்த்தம்.

மனம் தடுமாற்றம், அரிப்பு, அதிக தூக்கம் அல்லது மிதமான மயக்கம், குறைவான நாடித் துடிப்பு போன்றவை டெங்கு போவதற்கான அறிகுறிகள்.

இதை மருத்துவர்கள் ஷாக் (shock) என்கிறார்கள். இதன் அறிகுறிகள்.
1.     உடம்பு மிகவும் சில் என்று இருக்கும். ஒருவர் கையை தொடும்போதே ஐஸ் போல இருக்கும்.
2.     நாடித் துடிப்பு குறைவாக இருப்பது.
3.     ரத்தக் கசிவு. பல் ஈறுகளில், மூக்கினில், எச்சிலில், கழிவில்.
4.     தோல் சிவப்பு நிறமாக மாறுதல்.
5.     வாயை சுற்றி அல்லது உதடு நீலமாக மாறுதல்.

இந்த ஷாக் வந்த பின் நோயாளிகளை காப்பாற்றுவது சிறிது கடினமாக ஆகிவிடுகிறது. இதில் மிகப் பெரிய கொடுமை இந்த ஷாக் பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைத் தான் அதிகமாக தாக்குகிறது. நுரையீரல் சுற்றி நீர் கட்டுவது முதலில் ஆரம்பிக்கிறது. இதனால் மூச்சு விடுவது சிரமமாகிறது. மருத்துவரைப் பொறுத்த வரை இதில் பிரச்சினை என்னவென்றால், குழந்தை கடைசி வரை நன்றாக பேசிக் கொண்டும், விளையாடிக் கொண்டும் இருக்கும். ஷாக் வந்தால் உடனே அனைத்தும் அடங்கி விடும். (இந்த நிலையில் தான் என் மகள் இருந்தாள்), ஆனால் இது நடப்பது ஆயிரத்தில் ஒருவருக்குத் தான். (தமிழ் நாட்டில் நூற்றுக்கு ஒருவருக்கு என குறைந்து வருவதாக சொல்கிறார்கள்). இந்த ஷாக் வந்த பின் காப்பாற்றபடுவது வெறும் இரண்டு சதவிகிதம் தான். 

டெங்குவிலிருந்து உங்களை (உங்கள் குழந்தைகளை) காப்பாற்றிக் கொள்ள :
1.  உடல் முழுக்க மறையுமாறு உடை அணியுங்கள்.
2.  வெளிர் நிற ஆடைகள் அணியுங்கள். கரு (dark) நிற ஆடைகளை கொசுக்கள் மிகவும் விரும்பும்.
3.  நமக்கெல்லாம் முன்பே தெரிந்த கொசு விரட்டிகள், கொசு வலைகள்.
4.  Air Condition கொசுவை ஒரே இடத்தில் முடங்க வைக்கும்.

ஆக டெங்குவுடன் போராட நமக்கு இருக்கும் ஒரே ஆயுதம் தண்ணீர் மட்டும் தான்.

நீரின்றி அமையாது உலகு.

4 comments:

  1. Thanks a lot Mr.AdiMurugan - Prabaharan -EC Member, CTAT, Tuticorin

    ReplyDelete
  2. this not for u r message all over tamilnadu see this important how is your child assoonas good helthy

    ReplyDelete